தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால், அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மற்றொரு புறம் பணப்படுவாடாவை தடுக்கும் வகையில் அனைத்து சட்டமன்றத் தொகுதியிலும், 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தேர்தல் நடவடிக்கையாக, சென்னையில் ஒரே நாளில் 228 காவல் ஆய்வாளர்களைப் பணியிட மாற்றம் செய்து, தமிழக டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக 112 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 116 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் 49 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும், மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கும் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பிற காவல் நிலையங்களுக்கும் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.