தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திலிருந்து ஹைதர் அலியை நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் பொதுச்செயலாளராக ஹைதர் அலி இருந்து வந்தார். இந்த நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த ஜூன் மாதம் 29- ஆம் தேதி, தமுமுக பொதுக்குழு கூடி அவரை கட்சியிலிருந்து நீக்கியது. அதற்கு முன்னதாக ஹைதர் அலி, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, பொதுக்குழு எடுத்த நடவடிக்கைக்குத் தடை கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆனால், உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் ஹைதர் அலி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், நேற்று (18- ஆம் தேதி) தீர்ப்பளித்த நீதிபதிகள், ஹைதர் அலியை நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்று கூறி அவர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளனர்.