"முதல்ல பணத்தை கட்டிட்டு, அப்புறம் உன்னோட வண்டிய எடுத்துட்டு போ" என டிரைவரின் வாகனத்தை பிடுங்கி வந்த பைனான்ஸ் ஊழியர் ஒருவர், அந்த லாரியை தலைக்குப்புற கவிழ்க்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதிக்கு அருகே உள்ளது மங்கரசுவளையபாளையம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் அவிநாசி - திருப்பூர் சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே சமயம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குமரேசன் வறுமையில் வாடிவந்த நேரத்தில் சிவசக்தி எனும் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த பணத்தையும் சரிவர திருப்பிச் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதியன்று ஆட்டையம்பாளையம் அருகில் தனது லாரியை நிறுத்திய குமரேசன், அங்கிருக்கும் கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவசக்தி ஃபைனான்ஸில் பணிபுரியும் மேனேஜர் வீரமணி, பைனான்ஸ் ஊழியர்கள் கிருஷ்ணன் மற்றும் முருகேஷ் ஆகிய மூவரும் குமரேசனிடம் பணத்தை கட்டச் சொல்லி வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து விரக்தியடைந்த பைனான்ஸ் ஊழியர் முருகேஷ் என்பவர் குமரேசனின் லாரியை எடுத்துக்கொண்டு, "முதல்ல பணத்தை கட்டிட்டு, அப்புறம் உன்னோட வண்டிய எடுத்துட்டு போ" எனக் கூறியபடி அந்த லாரியை வேகமாக ஓட்டிக்கொண்டு கோவை ரோட்டில் அவிநாசி நோக்கி வந்துள்ளார்.
அப்போது, அந்த லாரியை அதிவேகமாக ஓட்டி வந்ததால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அங்கிருந்த டிவைடரை உடைத்துக்கொண்டு வாகனங்கள் மீது லாரி பயங்கரமாக மோதியது. அதுமட்டுமின்றி, சாலையின் ஓரமாக நின்றுகொண்டிருந்த போலீசாரின் ஜீப் மீதும் மோதி தடம்புரண்டுள்ளது. அந்த சமயம், லாரி கட்டுப்பாட்டை இழந்து வருவதைக் கண்ட போக்குவரத்து போலீசாரும் பொதுமக்களுக்கும் அங்கிருந்து நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர். இதையடுத்து, இந்த விபத்து சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.