Skip to main content

வணிக வரித்துறையினர் என்று கூறி  பணம் பறிப்பு; ஓய்வு பெற்ற உதவியாளர் உட்பட இருவர் கைது 

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

 tirupur district muthur retirement office assistant incident 

 

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் முத்தூர் - ஈரோடு சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று கடையில் விற்பனை செய்து கொண்டிருந்த மதிய வேளையில், அரசு அடையாள அட்டை அணிந்து கொண்டு கடைக்கு வந்த இருவர்., ஈரோட்டில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்திலிருந்து வருவதாகக் கூறி தங்களை அறிமுகம் செய்து கொண்டு கடையில் உள்ள கணக்கு வழக்கு ஆவணங்களை கேட்டு ஆய்வு செய்தனர்.

 

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மணிகண்டனிடம் இருந்து 700 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் உண்மையிலேயே வணிக வரித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள்தானா என மணிகண்டனுக்கு சந்தேகம் ஏற்பட உடனடியாக அவர்களைப் பின் தொடர்ந்து சென்று இருவரையும் பிடித்து முத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

 

பிடிபட்ட அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஒருவர் ஈரோடு மாவட்டம் வளையக்கார பகுதியைச் சேர்ந்த தங்கவேல் (வயது 62) ஆவார். இவர் ஈரோடு வணிக வரித்துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி கடந்த 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றது தெரிய வந்தது. மற்றொருவர் கார்த்திகேயன் (வயது 49) இவரும் ஈரோடு மாவட்டம் வளையக்கார பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் போன்று நடித்து பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள், கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்