திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காட்டு யானைகள் கூட்டம் கடந்த 21- ஆம் தேதி மாச்சம்பட்டு பகுதியிலும், இரண்டாவது நாள் சின்னவரிகம் ஊராட்சி பெங்களமூலை என்ற கிராமத்திலும், 3- வது நாள் பந்தேரப்பள்ளி பகுதியிலும், 4- வது நாள் மீண்டும் மாச்சம்ப்பட்டு பகுதியிலும், 5- வது நாள் உமராபாத், மாச்சம்பட்டு, கொத்தூர், பாலூர், பனங்காட்டூர் ஆகிய கிராம பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு மற்றும் காய்கறி உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது.
இந்நிலையில் 6- வது நாளாக காட்டு யானைகள் கூட்டம் ஆம்பூர் அருகே ஓணாங்குட்டை கிராம பகுதியில் உள்ள நிலங்களில் புகுந்தது. விவசாயிகள் ஸ்ரீ ராமுலு, சுப்பிரமணி, கல்யாணி, ஏகநாதன், கிருஷ்ணன் ஆகியோரது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை, துவரை, தக்காளி பயிர்களை சேதப்படுத்தின.
பின்னர் டிசம்பர் 29- ஆம் தேதி காலை யானைகள் கூட்டம் அருகில் உள்ள காப்பு காட்டில் தஞ்சம் அடைந்துள்ளது. யானைக்கூட்டம் இரவு நேரத்தில் மீண்டும் நிலங்களில் ஊடுருவி பயிர்களை சேதம் ஏற்படுத்தும் என்று அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இதனிடையே யானை கூட்டத்தின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.