சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் தனியார் கண் மருத்துவமனை கட்டப்பட்டு வரும் நிலையில், அந்த கட்டிடத்திற்கு தேவையான மழைநீரை சேமிக்க மழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்க குழி தோண்டும் பொழுது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து குழிவெட்டும் தொழிலாளர்கள் மூன்று பேர் உள்ளே விழுந்துள்ளனர். இதுதொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படை வீரர்கள் ஆகாஷ்,வீரப்பன் ஆகிய இருவரை போராடி மீட்டனர்.
மேலும் ஒருவரை மீட்க முடியாமல் போராடி வந்தனர். மதியம் 2 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்த நிலையில், தற்பொழுது வரை 2 மணிநேரத்திற்கு மேலாக இந்த மீட்பு பணி நடைபெற்றது. 15 அடி ஆழம் கொண்ட அந்த குழிக்குள் மீட்கப்படாமல் ஒரு நபர் மண்ணுக்குள் புதைந்திருக்கிறார். இன்னும் இரண்டு மணிநேரத்தில் குழிக்குள் சிக்கியுள்ள நபரை மீட்டுவிட முடியும் என தீயணைப்பு துறையினர் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், மூன்றாவது நபரான சின்னத்துரை தற்பொழுது மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ள நிலையில், 108 ஆம்புலன்சில் சின்னத்துரை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.