டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சியினால் மனிதர்களை தாண்டி கால்நடைகளும் தண்ணீரின்றி தவித்துவருகிறது, நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனதால் கால்நடைகள் தண்ணீர் தேடி அலையும் அவலம் நிலவிவருகிறது.
கடந்த ஒரு மூன்று மாத காலமாக டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவிவருகிறது. கோடை மழை கைவிட்டதால் நீர்நிலைகளும், குளம் குட்டைகளும், நிலத்தடி நீராதாரமும் வறண்டு போய்விட்டது. இதனால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிதண்ணீர் கூட கிடைக்காத அளவில் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், மனிதர்களே நான்கு, ஐந்து கிலோ மீட்டர் தண்ணீரை தேடி அலையும் அவலம் நீடித்துவருகிறது.
மனிதர்களின் நிலமையே இப்படி என்றால் ஆடுகள், மாடுகள், குதிரைகள், கோழிகள் என கால்நடைகயின் அவலத்தை சொல்லவா வேண்டும், மூன்று மாவட்டத்திலும் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி அடிமாட்டு விலைக்கு விற்பனையாகிவருகின்றன. கடந்த 7 ஆண்டுகளாக தொடரந்து வறட்சி நிலவிவந்தாலும் டெல்டாவின் கடைமடை மாவட்டங்களான, திருவாரூர், நாகை மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள், வாய்க்கால்கள், என நீர்நிலைகள் எதுவும் தூர்வாரப்படாமல் விட்டதால் வறண்டு காணப்படுகிறது. இந்த ஆண்டு கோடை மழையும் கைவிட்டதால் கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கின்றனர். விவசாயிகள் தங்களின் கால்நடைகளை வளர்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
"நாளுக்கு நாள் கொளுத்தும் வெயிலின் கொடூரத்தால், மேய்ச்சலுக்கு செல்லும் கிடை மாடுகள், ஆடுகள் தண்ணீருக்காக குளத்திலும் குட்டையிலும் கொஞ்ச நஞ்சம் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரை குடித்து உயிர் வாழக்கூடிய அவலநிலையே இங்கு ஏற்பட்டுள்ளது," என்கிறார்கள் விவசாயிகள்.
"கடந்த பல ஆண்டுகளாகவே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு தவிக்கிறோம், குடிக்ககூட தண்ணீரை விலை கொடுத்து வாங்கி குடிக்கிறோம், கால்நடைகளுக்கு என்ன செய்ய முடியும், குளம் குட்டைகளில் தேங்கி கிடைக்கும் கழிவுநீரை கொடுத்து வருகிறோம். அதனால் பல நோய்களும் வந்து இறக்கிறது. இந்த கோடையை சாதகமாக்கிக்கொண்டு குளம் குட்டைகளை தூர்வாரியிருக்கனும், அதை செய்யாமல் இதுவரை இருந்துவிட்டு மழைநாட்களில் பணத்தை ஒதுக்கி ஏமாற்றுவாங்க. மக்களுக்கான அரசாகவே இல்லை. " என்கிறார் வேதாரண்யம் விவசாயி சாமிநாதன்.