தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் கடந்த 2 நாட்களாக கபடி போட்டி நடத்தப்பட்டது.
தேவேந்திர குல வேளாளர் இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் கலந்து கொண்ட ரெகுராமபுரம் அணி தோல்வி அடைந்து வெளியேறியது. அப்போது, அவர்கள் போட்டி நடத்தியவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்த சங்கரபாண்டி(25) என்ற இளைஞரை, ரெகுராமபுரம் அணியை சேர்ந்தவர்கள் சரமாரி தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![thoothukudi Kabaddi match dispute Intensive care for injured youth police investigate](http://image.nakkheeran.in/cdn/farfuture/F67mMKRjyk5eBdwMutXFVz60t68rSgbsGUNSJmDdly4/1568146346/sites/default/files/inline-images/kapadi2.jpg)
சங்கரபாண்டி அளித்த புகாரின் பேரில் 3 பேரை பிடித்து சங்கரலிங்கபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், தாக்குதல் நடத்தியவர்களில் பட்டாலியனில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவரும் இடம்பெற்றதாக தெரிகிறது. அவருடைய பெயரையும் சங்கரபாண்டி புகாரில் குறிப்பிட்டு உள்ளார். ஆனால், 'பாட்டாலியன் போலீஸ்காரர்' பெயரை வழக்கில் சேர்க்க போலீஸார் தயங்குவதாக சொல்லப்படுகிறது. மேலும், மோதலில் ஈடுபட்டவர்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இரு தரப்பினரும் சமாதானமாக செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்துவதாக தெரிகிறது.
ஆனால், தாக்குதலுக்கு ஆளானவர் திமுக நிர்வாகியின் மகன். எனவே, நாளை இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் முடிந்த பிறகு, இந்த விவகாரத்தை பற்றி பேசுவோம் என காவல் துறை காலம் தாழ்த்துவதாக சொல்லப்படுகிறது.