விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது தி. குமாரமங்கலம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. 38 வயதான இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். தற்போது சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கரோனா தடை உத்தரவு காரணமாக வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.
இவரும் மேல் தனியாலம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவரும் காதலித்து இரு குடும்பத்தினரின் அனுமதியுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பதினோரு வயதில் முகிலன், ஏழு வயதில் பிரியங்கா, மூன்று வயதில் பிரதிக்ஷா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
ராஜலட்சுமி தந்தை சேட்டு என்கிற ராஜேந்திரன் (வயது 62). இவருக்கு சொந்தமான இடத்தில் செல்வமணி வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இதனால் மாமனார் ராஜேந்திரன் மருமகன் செல்வமணி இருவருக்கும் இடையே வீட்டுமனை குறித்து அடிக்கடி கடும் வாக்குவாதம் தகராறு நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் மாமனார் மருமகன் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது மாமனார் ராஜேந்திரன் அவரது உறவினர் ராமச்சந்திரன், ஏழுமலை ஆகிய இருவரும் சேர்ந்து செல்வமணியை திட்டியதோடு கற்களாலும் மறை கட்டைகளாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த செல்வமணி மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரது மனைவி ராஜலட்சுமி மற்றும் உறவினர்கள் செல்வமணியை மீட்டு இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வமணி உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து ராஜலட்சுமி திருவெண்ணைநல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ராஜேந்திரன், ஏழுமலை ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.