விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், உள்ளாட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் உரிய விண்ணப்ப படிவத்தை மாவட்ட கழகத்தில் இருந்து பெற்று, தாம் போட்டியிடும் பொறுப்பு மற்றும் தம்மைப்பற்றிய விவரங்களை அந்த படிவத்தில் குறிப்பிட்டு, 14.11.2019 முதுல் 20.11.2019 வரை மாவட்ட கழக அலுவலகத்தில் அல்லது சென்னையில் உள்ள திமுக தலைமைக்கழகத்தில் உரிய கட்டணத்துடன் வழங்குமாறு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான எ.வ.வேலு அறிவித்து விண்ணப்ப படிவங்கள் வழங்குதலை தொடங்கிவைத்தார்.
அதோடு, பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுக்களை பெறுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ அவர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்கினார்கள். திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சி மற்றும் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம், கலசப்பாக்கம், புதுப்பாளையம், போளூர், ஜவ்வாதுமலை என 9 ஒன்றியங்களும், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், செங்கம், புதுப்பாளையம், களம்பூர் என 5 பேரூராட்சிகளும் உள்ளது.
இதில் நகரமன்றத்தலைவர், நகரமன்ற உறுப்பினர், பேரூராட்சித் தலைவர், பேரூராட்சி மன்ற உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, உரிய கட்டணத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் பெறப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய கட்டணத்துடன் 14.11.2019 முதல் 20.11.2019 வரை மாவட்ட திமுக அலுவலகத்தில் வழங்கலாம் எனக்கூறப்பட்டுள்ளது.
கட்டணம் தான் தற்போது திமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீட் கேட்பவர்கள் நகர மன்ற தலைவர் பதவிக்கு 25 ஆயிரம், நகர மன்ற உறுப்பினர் 5 ஆயிரம், பேரூராட்சி மன்ற தலைவர் 10 ஆயிரம், மன்ற உறுப்பினர் 2500, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 10 ஆயிரம், ஊராட்சிக்குழு உறுப்பினர் 5 ஆயிரம் என திமுக நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
கடந்த 9 ஆண்டுகளாக எதிர்கட்சியாக உள்ளோம். வருமானத்துக்கு பெரியதாக எந்த வழியும்மில்லை. இந்த நிலையிலும் இவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கலாம்மா என்பதே தமிழகம் முழுவதும் திமுகவில் பலரின் கேள்வி. இதில் சிலர் தங்களது முகநூல் பக்கத்தில் குமுறலாகவும் வெளியிட்டுள்ளனர், திருவண்ணாமலை நகரை சேர்ந்த ஒரு சிலரும் வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.