திருவாரூரில் மத்திய பல்கலைக்கழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மாணவியின் உடலை மீட்டு நன்னிலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் அருகே நன்னிலம் அடுத்துள்ள நீலகுடி கிராமத்தில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்கு வந்து மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது மகள் மைதிலி. இவர் இக்கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பல்கலைகழகத்தின் விடுதியிலேயே தங்கி படித்து வரும் நிலையில், விடுதியில் நேற்று (30.11.2019) இரவு சக மாணவிகள் சாப்பிட சென்ற நேரத்தில் மைதிலி மட்டும் சாப்பிட போகாமல், விடுதி அறையிலேயே இருந்துள்ளார். மற்ற மாணவிகள் சாப்பிட்டு விட்டு வந்து பார்த்தபோது அறை பூட்டிய படியே, அறையின் உள்ளே உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டபடி தொங்கிக் கொண்டிருந்தார். வெளியே சென்று திரும்பி வந்து பார்த்த மாணவிகள் சத்தமிட்டுள்ளனர். அடுத்தடுத்த அறையில் இருந்து ஓடிவந்து மாணவிகள் பார்த்தபோது மாணவி மைதிலி தூக்கு போட்டு இறந்துள்ளது தெரியவந்தது.
உடனடியாக மத்திய பல்கலைகழக நிர்வாகம் சார்பில் நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மைதிலியின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.
தகவலறிந்த மைதிலியின் பெற்றோர் ஓசூரில் இருந்து மத்திய பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளனர். அவர்களிடமும், மாணவிகளிடமும், பல்கலை நிர்வாகத்திடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.