தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் பற்றாக்குறை தொடங்கியுள்ளது. கோடைக்காலம் வந்தாலே குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே குடிநீர் பற்றாக்குறை தொடங்கியது. ஆனால் கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு பொதுமக்கள் எதற்காகவும் வெளியே வரக்கூடாது என அடக்கியதால், சாப்பாட்டுக்கே பிரச்சனை என்னும்போது தண்ணீர் தேவை பெரியதாகத் தெரியவில்லை.
தற்போது ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டு பொதுமக்கள் வெளியே வரத்துவங்கியுள்ளனர். இந்நிலையில் குடிநீர் பிரச்சனை வெடிக்கத் துவங்கியுள்ளது. வாரத்தில் 2 நாள் மட்டுமே குடிக்கத் தண்ணீர் வருகிறது என்கிற குற்றச்சாட்டு கிராமங்களில் பரவலாக எதிரொலிக்கிறது.
கடந்த காலத்தில் கோடை வருவதற்கு முன்பே சிறப்பு ஏற்பாடுகள் மூலமாக, உள்ளாட்சி துறைக்கு நிதிகள் ஒதுக்கி, குடிநீர் பஞ்சத்தைப் போக்க நடவடிக்கை எடுப்பார்கள். இந்த ஆண்டு அப்படி எதுவும் செய்ய முடியாத அளவுக்கு கரோனா முடக்கியது.
தற்போது ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டு அதிகாரிகள் பணியாற்றி வரும் நிலையிலும் மக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீர் வழங்குவதில் இருந்து விலகுகிறது அரசு. மற்ற மாவட்டங்களை விட திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை மிக மிக அதிகமாக உள்ளது. இதுபற்றி அறிந்த திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளருமான எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இந்த வருடமும் வடகிழக்கு பருவமழை சரியாகப் பெய்யாத காரணத்தால் இந்த மாவட்டம் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த மாவட்டம் முழுக்க, முழுக்க விவசாயத்தை நம்பிய மாவட்டம். குடிநீர் பஞ்சம் இருப்பதால் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்களால் வெளியே வந்து தங்களது தேவைக்காகப் போராடவும், குரல் கொடுக்கவும் முடியாத நிலையில் உள்ளனர். அதனால் இதனைக் கருத்தில் கொண்டு உள்ளாட்சி நிர்வாகத்துக்கு சிறப்பு நிதிகளை ஒதுக்கி, குடிநீர் பஞ்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.