திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ளது நெக்னாமலை எனும் மலைக் கிராமம். இந்த மலைக் கிராமத்தின் மக்கள் தங்கள் கிராமத்திலிருந்து எந்த ஒரு அடிப்படைத் தேவைக்கும் 14 கி.மீ. கீழே இறங்கி வர வேண்டும். ஆனால், மலை பாதையான அந்த 14 கி.மீ.க்கும் எந்தவொரு சாலை வசதியும் கிடையாது. இவர்கள் இப்படியே 73 ஆண்டுகாலமாக தவித்துவருகின்றனர்.
இந்தக் கிராமத்திற்கு சாலை வசதி வேண்டுமென அம்மக்களும் நீண்டகாலமாக அரசிடம் கோரிக்கை வைத்துவருகின்றனர். 2020ஆம் ஆண்டு கரோனா பரவியபோது, அப்போதைய அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி இந்தக் கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகச் சென்றார். அப்போது அவரும் அந்த மலைப் பாதையில் நடைப் பயணமாகவே கிராமத்தைச் சென்றடைந்தார். அப்போதும் அங்கிருந்தவர்கள் அவரிடம் கோரிக்கை வைத்தனர். ஒரு கட்டத்திற்கு மேல், எந்த நடவடிக்கையும் இல்லாததால், கிராம மக்கள் தாங்களாகவே மணல் கொட்டி அதனை சமன் செய்து பாதையை உருவாக்கினர்.
ஆனால், கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக அந்த மணல் பாதையும் மாயமாகிப்போனது. இந்நிலையில், நேற்று (28.09.2021) காலை 11 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா திடீரென மலைப் பகுதிக்குச் செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் மலை அடிவாரம் வரை காரில் சென்றுவிட்டு, பின்பு 14 கிலோமீட்டர் தூரம் அதிகாரிகளுடன் நடந்தே சென்று மலைவாழ் மக்களிடம் குறைகளைக் கேட்டார்.
அங்கு வசிக்கும் 82 பேருக்குப் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் தலா, 2.70 லட்சம் ரூபாய் மதிப்பில் மொத்தம் 2.20 கோடி ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டும் பணி நடந்துவருவதை ஆட்சியர் பார்வையிட்டார். மேலும், கழிவறைகள் கட்ட 80 பேருக்குத் தலா 12 ஆயிரத்து 500 ரூபாய் ஒதுக்கீடு செய்த உத்தரவையும் வழங்கினார். மேலும், இங்கு வாழும் மக்களுக்கு குளோரின் கலந்த குடிநீர் வழங்கவும், அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்க ஊராட்சி செயலாளருக்கு உத்தரவிட்டார்.