திருச்சி-தஞ்சை மெயின்ரோட்டில் துவாக்குடி துவங்கி பால்பண்ணை வரை சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த 7 ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. இதை எமன் சாலை என்றே வர்ணிக்கிறார்கள் திருச்சியை சேர்ந்த மக்கள்.
இந்த பக்கம் பாய்லர் தொழிற்சாலை உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் இங்கே நெடுஞ்சாலை அமைக்கும்போது சர்வீஸ்ரோடு அமைக்கவில்லை என்பதால் தினந்தோறும் விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பு அதிகரித்து வருவது வாடிக்கையாக இருக்கிறது.
இது தொடர்பாக இந்த பகுதியில் சர்வீஸ்ரோடு கூட்டமைப்பு போராடி வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக தொடர் பிரச்சனையாக இருந்தும் தீர்க்க முடியாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் மாநில, மத்திய அமைச்சரும், திருச்சி எம்பியுமான திருநாவுக்கரசர் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பேசினார்.
அப்போது திருச்சி பால்பண்ணையிலிருந்து துவாக்குடி செல்லும் 14 கி.மீ தூரத்திற்கான சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டியதன் அவசியத்தையும், இதனால் ஏற்படும் விபத்துகள் குறித்த புள்ளிவிபரங்களை அமைச்சர் கட்கரியிடம் எம்பி திருநாவுகரசர் விளக்கினார். இந்த சந்திப்பின் போது சர்வீஸ் ரோடு அமைப்பின் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
ஏற்கனவே பிஜேபியில் இருந்த அனுபவத்தில் நிதின்கட்கரி உடனடியாக வரவேற்று பிரச்சனைகளை உன்னிப்பாக கேட்டு உடனே இதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.