அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2 ஆவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். 26 எதிர்க்கட்சிகளின் சார்பாக இந்த கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA- INDIAN NATIONAL DEVELOPMENTAL INCLUSIVE ALLIANCE) எனப் பெயர் சூட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்று மற்றும் நாளை என இரு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணிக்கான இலச்சினையும் வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தற்பொழுது மும்பை புறப்பட்டுள்ளார்.