Skip to main content

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு வலுக்கிறதே? ஸ்டாலின் பேட்டி

Published on 09/04/2018 | Edited on 09/04/2018

 

s c


திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  இன்று (09-04-2018) தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:


 
 ஸ்டாலின்: காவிரி மேலாண்மை வாரியத்தை ஏன் அமைக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் வெளிப்படையாக மத்திய அரசிடம் கேள்வியெழுப்பி, கண்டித்திருப்பது உள்ளபடியே வரவேற்கத்தக்கது. மேலும், மே மாதம் 3 ஆம் தேதி வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கால அவகாசம் கொடுத்திருப்பதில், தமிழக மக்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். மத்திய பாஜக அரசு கடைசி நேரத்தில் கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு இருப்பதே, முழுக்க முழுக்க இதற்கு காரணம் என்பதுதான் உண்மை. அதாவது, ‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் அடங்கியது தான் என்பதை உச்ச நீதிமன்றம் இன்று மிகவும் தெளிவாக அறுதியிட்டு கூறியிருக்கிறது.


 
எனவே, மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கையிழந்து விட்ட தமிழக மக்கள், இறுதியாக உச்ச நீதிமன்றத்தின் மீது மட்டும் நம்பிக்கை வைத்திருக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. மாதா மாதம் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய தண்ணீர் முறையாக வந்து சேரவில்லை. இதில் நான் சொல்ல விரும்புவது, இப்போது கூட குடி முழுகிப் போய்விடவில்லை. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ‘ஸ்கீம்’ என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு தாக்கல் செய்திருக்கின்ற மனுவை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொண்டு, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கின்ற முயற்சியில் முழுமையாக ஈடுபட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.


 
 ஒட்டுமொத்தமாக மத்திய அரசும், மாநில அரசும் தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கின்ற நிலை தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பதை, நீதிமன்றம் அளித்திருக்கின்ற விளக்கம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.


 
செய்தியாளர்: பதினைந்தாவது நிதி ஆணையம் குறித்து நீங்கள் கடிதம் எழுதியுள்ள நிலையில் தமிழக அரசு அந்தக் கூட்டத்தை புறக்கணித்து இருக்கிறதே?


 
ஸ்டாலின்: தமிழக அரசு தமிழக மக்களை பற்றிக் கவலைப்படவில்லை. மத்திய அரசை எதிர்த்து வாதிடவோ, போரிடவோ தயாராக இல்லை. எனவே, அவர்கள் புறக்கணித்திருப்பதை எண்ணி ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

 

 
செய்தியாளர்: திமுக தலைமையில் நடக்கும் அறவழிப் போராட்டங்களால் தீர்வு கிடைக்குமா?

ஸ்டாலின்: இந்தப் போராட்டக்களத்தை நாங்கள் அமைத்த பிறகுதான், ‘தமிழ்நாட்டில் போராட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும், நல்லதொரு தீர்ப்பு வரும்’, என்ற செய்தி உச்ச நீதிமன்றத்தில் இருந்து சூசகமாக வந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, காலக்கெடு முடிந்த கடைசி நிமிடம் வரை பொறுத்திருந்து, மத்திய அரசின் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று, மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்திருப்பதே இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.


 

செய்தியாளர்: காவிரி உரிமை மீட்புப் பயணம் மேலும் தொடருமா?
 
ஸ்டாலின்: காவிரி விவகாரத்தில் இன்னும் உரிய தீர்வு ஏற்படவில்லை. இந்தப் பயணம் 12 ஆம் தேதி வரை தொடர்கிறது. 13 ஆம் தேதி கவர்னர் மாளிகையை நோக்கி நாங்கள் செல்கிறோம். விரைவில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.


 

செய்தியாளர்: சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு வலுக்கிறதே?

ஸ்டாலின்: பொதுவாக விளையாட்டு வீரர்களை, விளையாட்டுப் போட்டிகளை ஊக்கப்படுத்துவது என்பது கடமை. அதேநேரத்தில், இப்போது இருக்கின்ற சூழ்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்ற தங்கள் உணர்வை, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது வெளிப்படுத்தி, அழுத்தம் கொடுத்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்பது எனது கருத்து.

 

சார்ந்த செய்திகள்