புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு 1999 ஜனவரி 8ஆம் தேதி கந்தர்வகோட்டையில் விபத்து ஒன்று நிகழ்ந்தது. இதில் இறந்த நண்பர்கள் இருவரின் நினைவாக அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குக் கல்வி உதவி பொருட்களை வழங்கி வரும் நண்பர்கள் குழுவின் செயல் உணர்வுப் பூர்வமாக நெகிழச் செய்திருக்கிறது. தமிழ்நாடு அரசு 1990 காலகட்டங்களில் வறட்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை ஒப்பந்த முறையில் செய்தது. அப்போது, படித்து பட்டங்கள் பெற்று வேலை தேடிக் கொண்டிருந்த ஏராளமான இளைஞர்கள் தமிழ்நாடு முழுவதும் அரசின் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலிக்கு பணியாற்றியுள்ளனர்.
இதே போல கந்தர்வக்கோட்டைப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அப்பகுதியில் தங்கி இருந்து பணி செய்து வந்துள்ளனர். 1999 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி ரெங்கசாமி, குமரேசன் ஆகிய தினக்கூலி வேலை செய்த இளைஞர்கள் பணி முடிந்து ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் அருகே சென்றபோது விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்தில் ஒருவரும் மருத்துவமனையில் மற்றொருவரும் உயிரிழந்துள்ளனர். இதனால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த ஒப்பந்தப் பணியாளர்களான சக நண்பர்கள் குழுவாக இணைந்து விபத்தில் உயிரிழந்த நண்பர்கள் நினைவாக விபத்துக்குள்ளான இடத்தில் உள்ள சிறு நினைவிடம் அமைத்து ஆண்டுதோறும் ஜனவரி 8ஆம் தேதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும், மறைந்த நண்பர்கள் நினைவாக கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சுற்றியுள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் உயர்ரக மை பேனாவும், அவர்களது சான்றிதழ்களை வைத்துக் கொள்வதற்கு ஃபைல், நோட்டு, புத்தகங்கள் வழங்குவதுடன் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு மதிப்பெண்கள் பெரும் மாணவர்களுக்கு ஆக்ஸ்போர்டு அகராதியும் வழங்கி வருகின்றனர். தற்போது இந்த நண்பர்களில் பலரும் அரசு பொறியாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், அஞ்சலகத்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை எனப் பல துறைகளில் உயர் பொறுப்புகளில் உள்ளனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 8ஆம் தேதியை மறப்பதில்லை. மறைந்த நண்பர்களுக்காக கந்தர்வக்கோட்டையில் ஒன்று கூடுகின்றனர்.
அதே போல, இந்த ஆண்டு நண்பர்கள் மறைந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நெகிழ்வுடன் நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஆண்டுதோறும் தமது நண்பர்களின் நினைவைப் போற்றும் வகையில் மாணவர்களுக்கு வழங்கும் இந்த சிறப்பு உதவி திட்டத்தினை ஒருபோதும் நிறுத்தாமல் இந்த ஆண்டும் வழங்கி மாணவர்களிடம், மறைந்த எங்கள் நண்பர்கள் நினைவாக 25 ஆண்டுகளாக ஏழை மாணவர்களின் கல்விக்காகச் செய்யும் சிறு உதவிகள் எங்களுக்கு மனநிறைவைத் தருகிறது. ஆகவே மாணவர்கள் அழியாத செல்வமான கல்வியை ஒரு போதும் நிறுத்திவிடாதீர்கள் என்று பேசியது மாணவர்களை நெகிழச் செய்தது. அண்ணன் தம்பிகளே ஒரு சில ஆண்டுகளில் தம்மைச் சார்ந்தோரை மறந்து விடும் இந்த அவசர உலகத்தில் என்றோ நட்பாக இருந்த நண்பர்களுக்காக 25 ஆண்டுகளாக சக நண்பர்கள் ஒன்றாகக் கூடி பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்து வரும் இது போன்ற நண்பர்கள் பாறையில் இருக்கும் ஈரம் போன்றவர்கள்.