துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியை சேர்ந்த அதிமுகவினர் மாவட்ட கவுன்சிலரில் பெரும்பான்மையாக வந்ததால் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அண்ண பிரகாஷின் மனைவி ஈஸ்வரிக்கு கொடுப்பதாக ஓபிஎஸ் உறுதி அளித்திருந்தார்.
ஆனால் அண்ண பிரகாஷ் டிடிவி அணியில் இருந்து மீண்டும் அதிமுகவுக்கு வந்தவர் என்று அதிமுகவினர் சிலர் ஓபிஎஸ்சிடம் புகார் தெரிவித்தனர். அதை தொடர்ந்து அண்ண பிரகாஷ் மனைவிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை கொடுக்க ஓபிஎஸ் மறுத்துவிட்டு தனது போடி தொகுதியில் உள்ள சில்லமரத்துப்பட்டி மாவட்ட கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட பிரிதாவுக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை ஓபிஎஸ் கொடுத்தார். இதனால் டென்ஷன் அடைந்த ஈஸ்வரி வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டு அழுதுகொண்டே வெளியேறினார். அப்படியிருந்தும் பெரும்பான்மையாக அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் இருந்ததால் மாவட்ட ஊராட்சித் தலைவராக போட்டியின்றி பிரிதா தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு யூனியன்களில் அதிமுக கூட்டணி ஆண்டிபட்டி, கம்பம், போடி, உத்தமபாளையம் ஆகிய நான்கு ஒன்றியத்தை கைப்பற்றியது. அதன்மூலம் ஆண்டிபட்டி ஒன்றியத் தலைவராக லோகிராஜன், போடி ஒன்றிய தலைவராக சுதாவும், உத்தமபாளையம் ஒன்றியத் தலைவராக ஜான்சியும், கம்பம் ஒன்றியத் தலைவராக அதிமுக கூட்டணி கட்சியிலுள்ள பிஜேபியை சேர்ந்த பழனி மணியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால் ஓபிஎஸ் தொகுதியான போடி தொகுதியில் தேனி ஒன்றியம் வருகிறது. அப்படி இருந்தும் அந்த தேனி ஒன்றியம் திமுகவுக்கு சாதகமாக இருந்து வந்ததால் அந்த தேனி ஒன்றியத்தில் பெரும்பான்மையான திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றி பெற்றதின் மூலம் திமுக ஒன்றிய செயலாளரான சக்கரவர்த்தி தேனி ஒன்றிய தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அந்த அளவுக்கு ஓபிஎஸ் தொகுதியில் உள்ள தேனி ஒன்றியத்தையே திமுக கோட்டையாக்கி இருக்கிறார் ஒன்றிய செயலாளரும், ஒன்றிய சேர்மனுமான சக்கரவர்த்தி.
அதுபோல் சின்னமனூர். பெரியகுளம் ஒன்றியங்களில் ஆளுங்கட்சியை விட எதிர்கட்சியான திமுக தலா ஒரு சீட்டுகள் கூடுதலாகப் பெற்று அதன் மூலம் ஒன்றிய தலைவர் பதவிகளை தக்க வைக்க இருந்தது. ஆனால் இந்த விஷயம் ஓபிஎஸ் காதுக்கு எட்டவே சின்னமனூர் ஒன்றியத்தில் வெற்றிபெற்ற திமுக ஒன்றிய கவுன்சிலர் ரேவதியும், பெரியகுளம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் செல்வத்தையும் பேரம்பேசி தன் பக்கம் இழுத்து கொண்டதால் பெரியகுளம் சின்னமனூர் ஒன்றியத்தில் திமுகவும், அதிமுகவும் சமநிலையில் இருந்தது.
அதுபோல் கடமலைக்குண்டு ஒன்றியத்தில் அதிமுகவும், திமுகவும் சமநிலையில் இருந்தது. இதனால் இந்த மூன்று ஒன்றியங்களிலும் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தலைவர் பதவிகளை தக்க வைக்க ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு ஒன்றிய கவுன்சிலர்களை தூக்க முயற்சி செய்தும் கூட பலன் அளிக்கவில்லை. அதனால் மூன்று ஒன்றிய தலைவர் தேர்தல் பதவிக்கு எதிர்க்கட்சி திமுக கவுன்சிலர்கள் வந்தும் கூட பெரும்பான்மை இல்லாததாலும் அதிமுக கவுன்சிலர்கள் வராததாலும் தேர்தல் நடத்த முடியாது என கூறி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை தேர்தல் அதிகாரி ஒத்தி வைத்து விட்டார்.
இதனால் டென்சன் அடைந்த திமுகவினர் ஆளுங்கட்சியை கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். இதில் மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் போடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் உ.பி.கள் பெருந்திரளாக கலந்துகொண்டு தங்கள் கண்டனங்களை எழுப்பினார்கள். அதை கண்டு போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இருந்தாலும் மாவட்டத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஓபிஎஸ் தரப்பு பெரும்பான்மையாக வெற்றி பெற்று பதவிகளை தக்க வைத்துக் கொண்டனர். அப்படி இருந்தும் ஓரளவுக்கு திமுக மாவட்டத்தில் அங்கங்கே வெற்றி பெற்றும் கூட ஆளுங்கட்சியின் அதிகார, பண பலத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பதவிகளை தக்கவைக்க திணறி வருகிறார்கள்.