தஞ்சாவூர் பெரிய கோயிலை நிர்வகிக்கும் அரண்மனை சமஸ்தான பரம்பரை அறங்காவலர் மீதான முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தக்கோரி முன்னாள் அமைச்சர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய சின்னமான தஞ்சாவூர் பெரிய கோயில் 9- வது நூற்றாண்டில் சோழ மன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது. சோழர்களின் ஆட்சிக்குப் பின்னர் பாண்டியர்கள், டெல்லி சுல்தான்கள், விஜய நகர மன்னர்கள், மராத்திய மன்னர்கள் எனப் பலரும் தஞ்சையை ஆண்டனர்.
![THANJAVUR BIG TEMPLE Trustee CHENNAI HIGH COURT DISPOSE CASE](http://image.nakkheeran.in/cdn/farfuture/Xj8aW1Zxczgo1HZtchtm5KmrYIQAd3VkmL-34zLQoZM/1581992883/sites/default/files/inline-images/Chennai_High_Court33333_19.jpg)
கடந்த 1985-ம் ஆண்டு தஞ்சை பெரிய கோயிலை நிர்வகிக்கும் அரண்மனை சமஸ்தான பரம்பரை அறங்காவலராக மராத்திய மன்னர் வாரிசான பாபாஜி ராஜா போன்ஸ்லே என்பவரை இந்து சமய அறநிலையத்துறை நியமித்தது. இந்த நியமனத்தை ரத்து செய்யக் கோரியும், பாபாஜி ராஜா போன்ஸ்லேக்கு எதிராக விசாரணை நடத்தக் கோரியும் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த சுவாமிநாதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாபாஜி ராஜா போன்ஸ்லே அறங்காவலராக இருந்த போது தஞ்சை பெரிய கோயிலில் இருந்த ராஜ ராஜ சோழன் மற்றும் லோகம்மாள் தேவி சிலைகள் காணாமல் போயிருப்பதாகவும், தஞ்சை கோயிலின் பாரம்பரியத்தைக் காக்க அவர் தவறிவிட்டதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சிலைகள் காணாமல் போனது குறித்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த நீதிபதிகள், அறங்காவலர் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் அது குறித்து இந்து சமய அறநிலையத்துறை விசாரணை நடத்தும் என நம்புவதாகத் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தனர்.