தமிழர்களின் கட்டிடக்கலைக்கு உலக சான்றாக இருந்துவரும் தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா இன்று பிப்ரவரி ஐந்தாம் தேதி இனிதே நடந்து முடிந்துள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கடந்த பத்து நாட்களாக மாவட்ட நிர்வாகம், உள்ளிட்ட ஆலய வழிபாட்டாளர்கள் செய்துவந்தனர். கடந்த குழுக்கு விழாவில் ஏற்பட்ட தீ விபத்தைப்போல எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதால், அதற்கு ஏற்ப திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பாதுகாப்பிற்காக 4500 காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் ஐந்துநாட்களாக கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்துவிட்டது.
![Peruvutaiyar temple](http://image.nakkheeran.in/cdn/farfuture/MwaE5vA2PM0H9_iMIEoi4N8tMZ0kcTGncQfjNzazFvo/1580897578/sites/default/files/inline-images/111111_74.jpg)
குடமுழுக்கு விழாவிற்கு முதல்வர் பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் வருவார்கள் என அதற்கான பில்டப் வேலைகளையும் செய்திருந்தனர். பொது வழியைவிட விஐபி, மற்றும் விவிஐபி வழியில்தான் கூட்டம் அலைமோதியது, அந்த அளவிற்கு பாஸ் வாரி வழங்கியிருந்தது மாவட்ட நிர்வாகம். குடமுழுக்கு விழாவான இன்று அதிகாலை முதலே மக்கள் வரத்துவங்கிவிட்டனர். அவர்களுக்கு கடைநிலை காவலர்கள் பக்குவமாக சென்று, திரும்பும் வழிகளைகூறி அனுப்பினர். பொதுமக்கள் குடமுழுக்கை பார்ப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த இடத்தை தாண்டி, தடுப்புக்களில் ஏரிகுதித்து அகழிக்கரைவரை கூடிவிட்டனர் பொதுமக்கள்.
அமைச்சர் பெருமக்கள் வருவார்கள் என அவர்களுக்கான வழிகள் வெரிச்சோடியே கிடந்தது. ஆனால் அமைச்சர் ஓ,எஸ்,மணியன், கணேசன், எச்,ராஜாவைத்தவிர சொல்லிக்கொள்ளும்படியாக விவிஐபிக்கள் வரவில்லை. சரியாக 9.30 மணிக்கு கோபுர உச்சியில் பச்சைக்கொடிகாட்ட தரையில் நின்று கோபுரத்தை அன்னாந்து பார்த்தபடியிருந்த பொதுமக்கள் கைகூப்பி வணங்கினர், கலசத்திற்கு தண்ணீர் ஊற்றப்பட்டு தீபம் காட்டப்பட்டது.
ஏன் அமைச்சர்கள் வரவில்லை என அதிமுக பிரமுகர் ஒருவரிடம் கேட்டோம், " எல்லாம் ஆன்மீக சென்டிமெண்ட்தான். பெருவுடையார் கோயிலுக்கு வந்தால் பதவிக்கு ஆபத்துவந்து சோதனைகள் அதிகம் வரும் என்கிற பயம்தான் காரணம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சதயவிழாவில் கலைஞர் கலந்துகொண்ட பிறகே அவரது ஆட்சி போனது என்கிற நம்பிக்கையே அமைச்சர்களையும், அதிகாரிகளையும் வரவிடாமல் தடுத்துள்ளது. அதற்காக லோக்கல் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், விஜயபாஸ்கர் கூட வரவில்லை என்பதுதான் வேதனை" என்கிறார்.