Skip to main content

திட்டமிட்டப்படி மெரினாவில் அறவழிப்போராட்டம்: தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு அறிவிப்பு

Published on 27/04/2018 | Edited on 28/04/2018


 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வரும் ஏப்ரல் 29ஆம் தேதி திட்டமிட்டப்படி சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே அறவழிப்போராட்டம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 

சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் நடந்த தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ந.செல்லத்துரை, மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய செல்லதுரை,
 

தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நடந்தது. வேல்முருகன் தலைமையில் நடந்த இந்த ஆலோசனையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக் கூடிய அனைத்து இயக்கங்கள், கட்சிகள், மாணவர் அமைப்புகள் கலந்து கொண்டன. 
 

ஏற்கனவே கூட்டமைப்பு சார்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே அறவழிப்போராட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. நாங்கள் உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்கிறோம். நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவில்லை. 
 

காவல்துறை அனுமதி வழங்கினாலும், மறுத்தாலும் கண்டிப்பாக திட்டமிட்டப்படி ஏப்ரல் 29ஆம் தேதி அறவழிப்போராட்டம் நடைபெறும். கட்சி, மொழி, சாதி, மத உணர்வுகளை தாண்டி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அதற்கு போதிய அழுத்தம் கொடுக்காத தமிழக அரசை கண்டித்தும் அறவழிப்போராட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 

இதில் பங்கேற்குமாறு கட்சி சாராத மாணவர் அமைப்புகள், ஜனநாகய சக்திகளையும, பொதுமக்கள் என எல்லோரும் பங்கேற்க வேண்டும் என்று இந்த கூட்டமைப்பு சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். 
 

சார்ந்த செய்திகள்