கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
பின்னர் கே.எஸ்.அழகிரி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, "அக்னிபாத் என்ற திட்டம் என்பது நம்முடைய ராணுவத்திற்கு செய்யக்கூடிய ஒரு துரோகம். ஏனென்றால் இந்திய ராணுவம் வலிமையும், வீரமுமிக்க மிகுந்த பயிற்சி பெற்ற வீரர்களை கொண்ட ஒரு ராணுவம் ஆகும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து இந்திய ராணுவத்தினுடைய திறமை அதன் படைப்பிரிவுகளினுடைய பலம் உலகமே அறிந்த ஒன்றாகும். ஆனால் அந்த ராணுவத்திற்கு நான்கு ஆண்டுகள் மட்டும் ஆள் சேர்க்கின்ற திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி உருவாக்குகிறது. நான்கு ஆண்டுகளில் ராணுவத்தில் பணிபுரிய கூடிய இளைஞர்கள் எதையும் அறிந்து கொள்ள முடியாது. பா.ஜ.கவின் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக மட்டும்தான் இந்த அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இளைஞர்களை சீரழிக்கும் இத்திட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.
நாடு வேகமாக முன்னேறுகிறது என்று மோடி கூறி வருகிறார். ஆனால் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 7 ஆண்டு காலமாக அடிக்கல் நாட்டி அப்படியே இருக்கிறது. இதுவரைக்கும் அதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ரயில்வே துறையில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. வந்தேமாதரம் என்ற ரயில்வே திட்டத்தில் தமிழகத்திற்கு ஒரு ரயில் கூட சேர்க்கவில்லை. அத்திட்டம் முழுவதுமாக, வடமாநிலங்களில் தான் செயல்படுகிறது. அத்திட்டம் தமிழகத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் விழுப்புரம் விக்கிரவாண்டியில் இருந்து, தஞ்சாவூர் செல்கின்ற நெடுஞ்சாலை பணி கடந்த எட்டு ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் முழுமையடையாமல் தாமதமாகி வருகிறது. உடனடியாக அச்சாலையை விரைந்து முடிக்க வேண்டும்" என்றார்.
அவரிடம் ' மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி எமர்ஜென்சியின் இருண்ட காலத்தை மறந்து விடக்கூடாது' என்று கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர் கேட்டதற்கு, "எமர்ஜென்சி நடந்தது எப்போது? அத்தைக்கு மீசை மொளச்சா... என்ற பழமொழி போல் எமர்ஜென்சி முடிந்து எவ்வளவு காலம் ஆகிறது, அதற்காக இந்திராகாந்தி அவர்கள் தன்னுடைய வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்கள். அதன்பிறகு பல தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. இன்றைக்கு அதைப்பற்றி பேசுவதில் பொருள் என்ன இருக்கிறது?" என்று கூறினார்.