


























நாட்டின் 72- வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியேற்றி வைத்தார். பின்பு முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். நாட்டின் பல்வேறு துறைகளின் சாதனை விளக்க வாகன அணி வகுப்பும் மெரினா கடற்கரை சாலையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
தமிழகத்தில் வீரதீர செயல்களைப் புரிந்த 4 பேருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்ணா பதக்கங்களை வழங்கினார். அதன்படி, தருமபுரியில் கிணற்றில் விழுந்த யானையை மீட்டு சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர் பிரகாஷ், ரயில் விபத்தைத் தடுக்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்ட ரயில் ஓட்டுநர் சுரேஷ், நீலகிரியில் காவலர் ஜெயராம் உயிரைக் காப்பாற்றியதற்காக வாகன ஓட்டுநர் புகழேந்திரன், ராணிப்பேட்டை மாவட்டம், புலிவலம் அரசுப் பள்ளி உதவி ஆசிரியர் முல்லை ஆகிய 4 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
மேலும், கோவை மாவட்டம் குனியமுத்தூரில் மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டதால் அப்துல் ஜபாருக்கு கோட்டை அமீர் விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். விருதுடன் ரூபாய் 25,000-க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
அதேபோல் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி விருது விருதுநகரைச் சேர்ந்த க.செல்வக்குமாருக்கு வழங்கப்பட்டது. சேலம் நகர காவல்நிலைத்திற்கு முதல் பரிசும், திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டது. சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையத்திற்கான மூன்றாவது பரிசை வென்றது.
சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.