"டேய் இங்க வாடா.. எதுக்குடா இன்னைக்கு ஸ்கூலுக்கு வரல. ஒழுங்கா வந்துடு இல்லனா பிச்சிடுவேன்" என பள்ளிக்கு செல்லாமல் டிமிக்கி கொடுத்த மாணவனை வீடு தேடி வந்து அழைத்து சென்ற ஆசிரியரின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகே உள்ளது பெத்தநாயக்கனூர் கிராமம். இந்த பகுதியில் நீண்ட காலமாக அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அதே சமயம், தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருவதால் மாணவர்களின் தேர்ச்சிக்காக ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்வுகளை மட்டும் எழுத வரும் மாணவர்கள் சிறப்பு வகுப்புகளுக்கு வராமல் ஆங்காங்கே ஊரைச் சுற்றி வருகின்றனர். அதுபோல் இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சஞ்சீவ் என்பவரை ஆசிரியர்கள் பலமுறை பள்ளிக்கு அழைத்தும் அவர் சிறப்பு வகுப்புகளுக்கு வராமல் பல காரணத்தை கூறி தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.
இதையறிந்த அறிவியல் ஆசிரியர் ராஜசேகர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு நேராக மாணவன் வசிக்கும் இடத்திற்கே வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சஞ்சீவை பார்த்து, "டேய் இங்க வாடா.. எதுக்குடா இன்னைக்கு ஸ்கூலுக்கு வரல. உனக்கு எக்ஸாம் இருக்குறது தெரியாதா?" என ஆசிரியர் ராஜசேகர் கேட்டதற்கு அந்த மாணவர், "இல்ல சார், எங்க சித்தி தீர்த்தம் எடுக்குறாங்க.. அதுனால தான் வர முடில சார்" எனக் கூறியுள்ளார்.
ஆனால், மாணவனின் பேச்சை ஏற்க மறுத்த ஆசிரியர் ராஜசேகர், "டேய்.. உங்க சித்தி தானா தீர்த்தம் எடுக்குறாங்க. அதுக்கு நீ எதுக்கு ஸ்கூல் வராம இருக்க. எக்ஸாம் நடக்குற டைம்ல விளையாடிட்டு இருக்கீங்களா.. ஒழுங்கா வந்து வண்டில ஏறுடா.. நாளைக்கு நீங்கலாம் வந்துறனும். நானா வந்தனா பிச்சிடுவேன் சொல்லிட்டேன்" என அக்கறையோடு அந்த மாணவனை அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த சமயம், அங்கிருந்த சில சிறுவர்களை பார்த்து, "நீங்க எதுக்குடா ஸ்கூலுக்கு வரமாட்றீங்க. ஸ்கூலுக்கு வராம ஊருக்குள்ள சுத்திட்டு அலையப் போறிங்களா" என அவர்களையும் கண்டித்துள்ளார். இந்த நிகழ்வை பார்த்த அப்பகுதி மக்கள், மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பதற்காக ஆசிரியர் ஒருவர் மாணவனின் வீட்டிற்கே வந்து அறிவுரை கூறி அழைத்து சென்றது ஆசிரியர்கள் மீதான மரியாதை மேலும் உயர்வதாக பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
அதுமட்டுமின்றி, இந்த அரசு பள்ளி கடந்த 2017 ஆம் ஆண்டில் தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.