Skip to main content

டாஸ்மாக் வழக்குகள் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
chennai high court




சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த டாஸ்மாக் வழக்குகள் இரு நீதிபதிகள் அமர்வில் இருந்து மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன. 


தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தலைமையில்,  நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் பி.என் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வில்  டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளனர். 

டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் முதலில் நிபந்தனையின் பேரில் அனுமதி வழங்கியது.  பின்னர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை எனக் கோரி தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து, ஊரடங்கு முடியும் வரை தமிழகம் முழுவதுமுள்ள மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டது.  ஆன்லைன் மூலம் மட்டும் மது விற்பனை செய்யலாம் எனத் தெரிவித்திருந்தது.

 

 


உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள அதே வேளையில், ஆன்லைன் மூலமும் மது விற்பனை நடத்த அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த அனைத்து மனுக்களும் வரும் 14-ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என,  ஏற்கனவே டாஸ்மாக் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்திய நாராயணா அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்திருந்த நிலையில், தற்போது டாஸ்மாக்  தொடர்பான வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் இருந்து மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தலைமையில் நீதிபதிகள் வினித் கோத்தாரி, நீதிபதி பி.என் பிரகாஷ் ஆகியோர் கொண்ட மூன்று பேர் அமர்வு டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

 


 

சார்ந்த செய்திகள்