இனிமேல் டி.வி.பார்ப்பியா?... டி.வி.பார்ப்பாயா?... என ஆசிரியர்கள் மாணவர்களை கேட்க மாட்டார்கள், அடிக்கவும் மாட்டார்கள். ஆம், ஆசிரியரே வகுப்பறையில் இதோ இந்த டி.வி.யை பாருங்க என கூற தொடங்குகிறார்கள்.இனி செய்தியை பார்ப்போம்...
தமிழகம் முழுக்க உள்ள பள்ளிகளில் கல்வி தொலைகாட்சி ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 342 பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பப்படுகிறது என கலெக்டர் கதிரவன் இன்று தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில், 217 உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும், 125 மெட்ரிக் பள்ளிகளில் அரசு கேபிள் டி.வி., மற்றும் செயலி மூலம், கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பப்படுகிறது. இப்பள்ளிகள் தவிர, அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவ, மாணவிகள் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை பார்க்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஒளிபரப்பு மூலம், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில், போட்டி தேர்வுக்கான பயிற்சிகள், படைப்பாற்றலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு சொல்லும் நிபுணர்களின் பதில்கள், பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள், புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், உடற்பயிற்சி, ஆசிரியர் – மாணவர்களின் ஆரோக்கியம் குறித்த பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. அதே போல் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின் புதிய கண்டுபிடிப்புகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல்கள், என 200க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புதிய தகவல்கள் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படுகிறது. கல்வி தொலைக்காட்சி மூலம், கல்வித்துறையை சேர்ந்த அரசின் அனைத்து செயல்பாடுகளையும் அறிவதால், பிற பள்ளிகளை போல, அந்தந்த பள்ளிகளிலும் தங்கள் மாணவ, மாணவியருக்கும் செயல்பாடு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாய்ப்பாகிறது.
நேரடி ஒளிபரப்பை மட்டுமே பார்க்க முடியும் என்றில்லாமல், அவற்றை பதிவு செய்து வைத்தும், குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்கவும், ஒரே நிகழ்ச்சியை மீண்டும் பார்க்கவும் வாய்ப்புள்ளது. கல்வி தொலைக்காட்சி என்ற நிலையில், இதனை பார்க்க குழந்தைகளின் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர்கள் தேவையற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செல்லிடைபேசிகள், சமூக ஊடகங்கள் போன்றவற்றில் நேரத்தை செலவிடுகின்றனர். அதனை தவிர்த்து கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்புகளை பயனுள்ளதாக பார்க்க ஊக்கப்படுத்த வேண்டும்." என்றார்.