அதிரடியான இவரது செயல்பாடுகளை காமெடியாக பார்ப்பதா? இல்லை சீரியஸாக கவனிப்பதா? என்று பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருக்கிறார்கள் சிவகாசியில். யார் அவர்? அப்படி என்ன செய்துவிட்டார்?
பொதுவாக, பட்டாசு பிரச்சனைகள் குறித்து பெரிய பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் செய்தியாளர்களிடம் பேசுவதற்கு தயங்குவார்கள். குறிப்பாக, அரசுத்துறை அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் லஞ்சம் வாங்கி வருவது குறித்து கேள்வி கேட்டால், வாய் திறக்க மாட்டார்கள். இந்த நிலையில்தான், அதிகாரிகளின் அத்துமீறலான நடவடிக்கைகள் குறித்தும், பட்டாசு பிரச்சனையின் பின்னணியில் என்னென்ன வில்லங்க விவகாரங்கள் இருக்கின்றன என்றும் துணிச்சலாகப் பேட்டி அளிக்க ஆரம்பித்தார் சிவகாசி – மீனம்பட்டி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவராக இருக்கும் விநாயகமூர்த்தி. ஒரு கட்டத்தில், ‘பட்டாசு குறித்த பேட்டி என்றால் விநாயகமூர்த்திதான்’ என்று சொல்லும் அளவுக்கு மீடியாக்களின் செல்லப்பிள்ளை ஆகிவிட்டார்.
மீடியா நண்பர்களுடனான இந்த நெருக்கம் விநாயகமூர்த்திக்கு ஒருவித அசாத்திய துணிச்சலைத் தந்தது. தாலுகா அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலும் நடக்கின்ற முறைகேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேள்வி கேட்க ஆரம்பித்தார். இதனையே தகவலாக மீடியாக்களிடம் சொல்லவும் செய்தார். அதனால், உள்ளூர் சேனல்களிலிலிருந்து உலக சேனல்கள் வரை பிரபலமானார் விநாயகமூர்த்தி. நாளிதழ்களிலும் அவரது பேட்டி வெளிவந்த வண்ணம் இருந்தது.
தவறுகளைத் தட்டிக் கேட்பவராக இருந்த விநாயகமூர்த்தியை அதிகாரிகள் வட்டாரத்தில் மிரட்டலான நபராகப் பார்த்தார்கள். இதற்கு முன்னர் இருந்த விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற அதிகாரிகளிடம் நேரடியாகவே மோதினார். ‘இந்த அதிகாரி சரியில்லை. இவரது தவறான நடவடிக்கைகள் இவை. இவரை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும்.’ என்கிற ரீதியில், தனது சங்க லெட்டர் பேடிலேயே மேலதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பினார். சிவகாசி தாலுகா அலுவலக உதவியாளரைக் கூட விநாயகமூர்த்தி விட்டுவைக்கவில்லை. அதனால், மீடியாக்களுடனான நெருக்கத்தை தவறாகப் பயன்படுத்தி, விநாயகமூர்த்தி மிரட்டுகிறார் என்று அதிகாரிகள் வட்டம் முணுமுணுத்தது.
இதே ரீதியில்தான், சிவகாசி நகர் போக்குவரத்து காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராமநாதன் குறித்து விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பினார். ‘ராமநாதனின் அடாவடித்தனத்தைப் பாருங்கள். பொதுமக்களை இத்தனை கீழ்த்தரமாக நடத்துகிறார்.’ என வாட்ஸப்பில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். மேலும், ‘இனியும் நம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ராமநாதனை இடமாற்றம் செய்யும் வரையிலும், ஆண்களும் பெண்களும் சிவகாசி நகர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்துவோம்.’ என்று தான் பேசிய ஆடியோவையும் வாட்ஸப்பில் பரப்பினார். அந்த ஆடியோவில், ‘ராமநாதனுக்கு தைரியம் இருந்தால், காக்கிச் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு.. சரியான ஆம்பளையாக இருந்தால்..’ என்றெல்லாம் பேசிவிட்டு, ‘இதனை நான் சொல்லவில்லை.. மக்கள் சொல்கிறார்கள்.’ என்று விளக்கம் வேறு அளித்திருக்கிறார். கடைசியில் “நீயா? நானா? மோதிப்பார்த்துவிடுவோம்.’ என்று சவால் விடுகிறார்.
இவ்வளவு பேசினால் சும்மா இருக்குமா காவல்துறை? ‘அளவுக்கு மீறி நடந்துகொள்வதா? போலீஸிடமே மோதுவதா?’ என்று சினம் கொண்டது. டிராபிக் எஸ்.ஐ. ராமநாதனுக்கு வாட்ஸப் மூலம் மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார் விநாயகமூர்த்தி.
சினிமாக்களில் மட்டும்தான், ஹீரோவால் காவல்துறையினரை எதிர்த்து வீரவசனம் பேசமுடியும் என்பது விநாயகமூர்த்திக்கு தெரியாமல் போய்விட்டது.