சதுரங்க வேட்டை திரைப்படம் பாணியில் இரிடியம் கலந்த கலசம் இருப்பதாக கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுநரை ஏமாற்ற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (21). இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரிடம் டிசம்பர் 31-ந்தேதி இரவு அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் விளாங்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த ராஜி என்கின்ற ராஜசேகர் (27) என்பவர், விக்னேஷை அணுகி தன்னிடம் தனக்கு சொந்தமான கோயிலில் இருடியம் சக்தி கொண்ட ரூ. 10லட்சம் மதிப்பிலான இரண்டு கோபுர கலசங்கள் இருப்பதாகவும், அதனை விற்பதற்கு தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதனை நம்பி கோபுர கலசங்கள் பெறுவதற்காக விக்னேஷ் இன்று (01-01-25) காலை அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள முத்தையா நகர் பாலம் அருகே வந்துள்ளார். அங்கு காரில் இருந்த ராஜசேகரிடம், விக்னேஷ் முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட ராஜசேகர், காரில் அங்கிருந்து வேகமாக தப்பித்து சென்றுள்ளார். இதுகுறித்து விக்னேஷ் அண்ணாமலை நகர் போலீஸில் புகார் அளித்தார். இந்த நிலையில், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், கஜேந்திரன் மற்றும் போலீஸார் ஸ்ரீதர், ரமணி, மணிகணடன் ஆகியோர் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை சோதனைச் சாவடி அருகே மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு காரில் சென்ற ராஜசேகரை பிடித்து கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து இரண்டு கோபுர கலசங்களும், காந்த தூள், கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஏமாற்று பேர்வழியை பிடித்த போலீஸாரை பாராட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜி என்கின்ற ராஜசேகர் தன்னிடம் இருக்கும் கோயில் கலசங்களில் இருடியம் கலந்திருப்பதாக கூறி அண்ணாமலை நகரை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கலசத்தைக் காட்டி அரிசியுடன் காந்த தூள் கலந்து ஏமாற்றியது தெரியவந்தது. அண்ணாமலை நகர் போலீஸார் இரு கலசங்களையும் ,அவர் வந்த கார் ஆகியவற்ற பறிமுதல் செய்து, அவரை கைது செய்துள்ளனர்’ என்றார்.