தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கடந்த 18- ஆம் தேதி அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்றும், அதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
தென்காசி, செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களுக்கு விரைவில் தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் புதிய மாவட்டங்களுக்கான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் செங்கல்பட்டுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியான அருண் சுந்தர் தயாளனும், தென்காசிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜான் லூயிசும் நியமனம் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதிய மாவட்டங்களையும் சேர்த்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.