தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கொடுத்த அறிக்கை திமுக- காங்கிரஸ் கூட்டணிக்குள் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. இதனால் அழகிரியை கடிந்துகொண்டிருக்கிறார் ப.சிதம்பரம்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாவட்டம் மற்றும் ஒன்றிய குழுக்களின் தலைவர், துணை தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கனிசமான இடங்களை ஒதுக்காமல் புறக்கணித்து விட்டது திமுக. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் தொடங்கி முக்கிய நிர்வாகிகள் வரை கெஞ்சிப் பார்த்தும் பல மாவட்டங்களில் திமுக மா.செ.க்கள் இடம் தரவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி நொந்து போனது.
இதுகுறித்து காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், கே.எஸ்.அழகிரியை தொடர்புகொண்டு,‘’கூட்டணிக்குள் என்ன பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்? காங்கிரசுக்கு ஒரு சீட்டு கூட தர முடியாது என திமுக அடம் பிடிக்கிறது. எங்களை கிள்ளுக்கீரையாக திமுக மா.செ.க்கள் பார்க்கிறார்கள் ‘’என கொந்தளித்தனர். இதனையடுத்து, கே.எஸ். அழகிரியும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான கே.ஆர்.ராமசாமியும் இணைந்து திமுகவுக்கு எதிராக ஒரு கூட்டறிக்கையை வாசித்தனர்.
அதில், நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. தொடங்கத்திலிருந்தே எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மாவட்ட அளவில் எங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் 2 இடங்கள் மட்டுமே திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளது. 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 1 மாவட்ட ஊராட்சி மாவட்ட பதவியோ வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்‘’என சுட்டிக்காட்டியுள்ளனர்.
கூட்டணி தர்மத்திற்குப் புறம்பானது என்கிற வார்த்தைகள் திமுக தலைமையை மிகவும் காயப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அழகிரியின் அறிக்கை தங்களுக்கு ஏற்புடையதல்ல என்கிற ரீதியில், சோனியா காந்திக்கு தகவலை பாஸ் பண்ணியிருக்கிறது அறிவாலயம்.
இது குறித்து விசாரிக்குமாறு ப.சிதம்பரத்துக்கு, சோனியா கட்டளையிட, அவரும் அழகிரிக்கு செம டோஸ் கொடுத்திருக்கிறார்.
இது குறித்து நம்மிடம் பேசிய சத்தியமூர்த்திபவன் கதர்சட்டையினர், ‘’ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை பலகீனப்படுத்துவதை கொள்கையாக வைத்திருக்கிறது பாஜக. அந்த வகையில் தமிழகத்தில் திமுக கூட்டணிக்குள் காங்கிரஸ் இருப்பதால்தான் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. அதனால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என பாஜக திட்டமிடுகிறது. இப்படி ஒரு அரசியல் சதி டெல்லியில் நடந்து வருகிற நிலையில், திமுக தலைமையை காயப்படுத்துவது போல இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுவதா? என அழகிரியையும் கே.ஆர்.ராமசாமியையும் வறுத்தெடுத்துள்ளார் ப.சிதம்பரம். அப்போதுதான் தங்களது தவறுகளை உணர்ந்துள்ளனர். உடனே ப.சிதம்பரம் அறிவுறுத்தலின் பேரில், திமுகவை சமாதானப்படுத்த மீண்டும் ஒரு அறிக்கையை வாசித்திருக்கிறார் அழகிரி. ஆனாலும் காங்கிரஸ் மீதுள்ள கோபம் திமுகவுக்கு குறைந்த மாதிரி தெரியவில்லை ‘’என விவரிக்கிறார்கள்.
இதற்கிடையே, தேசிய குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுகளுக்கு எதிராக சோனியா தலைமையில் ஒன்றிணையும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. இப்படி ஒரு ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவின் போது ராகுல்காந்தி, மம்தா பானர்ஜியிடம் வலியுறுத்தியவரே ஸ்டாலின்தான். அப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ் ஏற்பாட்டில் நடக்கும் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொள்ளாதது திமுகவுக்கு கோபம் குறையாமல் இருப்பதையே காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.