
தமிழகத்தில், காவல்துறை வடக்கு தெற்கு மேற்கு மத்தி என 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மண்டல அளவில் ஐ.ஜி ரேங்கில் உயர் அதிகாரிகள் பணிபுரிந்து வருகிறார்கள். அதன்படி வடக்கு மண்டலத்தின் ஐ.ஜியாக உள்ளவர் நாகராஜன். இவரது கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உட்பட 10 மாவட்டங்கள் உள்ளன.
இந்த மாவட்டங்களில் உள்ள கிராம மக்கள் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள், முன்விரோத தகராறுகள், கணவன் மனைவி கருத்து வேறுபாடு பிரச்சனைகள், அண்ணன் தம்பி மோதல்கள் என பல்வேறு பிரச்சனைகள் காரணமாக காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் அளிப்பது, காவல்துறை இருதரப்பினரையும் வரவழைத்து விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்வதே நடைமுறையில் உள்ளது. ஆனால், தற்போது கரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் காவல் நிலையம் சென்று புகார் அளிப்பது குறைந்துள்ளது.
காரணம், கிராமங்களில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதா, அங்கு பிரச்சனைகளே இல்லையா, அனைத்து மக்களும் சுமுகமாக இணக்கமாக வாழ்கிறார்களா, இதனால் கிராமப்புறங்களில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை. பல்வேறு பிரச்சனைகள், குற்றச் சம்பவங்கள் தீர்க்கப்படாமல் அது விஸ்வரூபமெடுத்து பெரிதாகும் நிலையிலும் உள்ளது.
இதையெல்லாம் கருத்தில்கொண்டு வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், காவல்துறையினர் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உரிய விசாரணை செய்து தீர்வு காணும் திட்டத்தைக் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு துவக்கி வைத்துள்ளார். அதன்படி பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடங்களுக்கு நேரடியாகச் சென்று புகார் கொடுத்தத் தரப்பு, குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பு ஆகிய இரு தரப்பினர்களிடமும் நேரடியாக பொதுமக்கள் முன்னிலையில் விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நிரபராதிகள் விடுவிக்கப்படுகிறார்கள்.

இதனடிப்படையில் வடக்கு மண்டலத்தில் மட்டும், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 7,800 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பொதுமக்கள் அளித்த 7,000 புகார்களுக்கு அதன் புகார் சம்பந்தமான விசாரணைக்கு 600 இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதில் 4,000 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மீதி 3,800 புகார்களில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரையும் காவல் நிலையம் வரவழைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்படி புகார்களை விசாரிக்க கிராமங்களுக்கே காவல்துறையினர் செல்லும்போது பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் ஒருவித இணக்கமான சூழ்நிலை ஏற்படுகிறது. வெளிப்படையான விசாரணை நடத்துவதால் புகார் கொடுத்துள்ள நபர்கள், தங்கள் பிரச்சனைகள் தீர்ந்தால் போதும் என்று உணர்கின்றனர். பொதுமக்கள் மத்தியில் இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் கைது செய்ய வேண்டிய அளவிற்கு குற்றங்கள் நடைபெற்று இருந்தால் அதற்குரிய சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
போலீசார் நேரடியாகக் கிராமங்களுக்கே சென்று விசாரணை நடத்துவதால் இடைத்தரகர்கள் பணம் சம்பாதிப்பது தடுக்கப்பட்டுள்ளது. இதே திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கு, காவல்துறை அதிகாரிகள் தரப்பில் ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. போலீசாரை தேடிச்சென்று புகார் கொடுக்கும் காலம் மாறி, போலீசாரே மக்களின் பிரச்சனைகளை நேரடியாகச் சென்று பார்த்து, புகாரைப் பெற்று தீர்வு காணும் நடைமுறை வந்துள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்கிறார்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர்.