தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, டிசம்பர் 30 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆணையர் அறிவிப்பு.
கிராம உள்ளாட்சித் தேர்தல் வழக்கம் போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படுகிறது. மேலும் நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும். முதல் கட்டத்தேர்தலில் 33,698 வாக்கு இயந்திரம், இரண்டாம் கட்டத்தேர்தலில் 32,092 இயந்திரம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் காலை 07.00 மணிக்கு தொடங்கி மாலை 05.00 மணியுடன் நிறைவடைகிறது. முதல் கட்ட தேர்வில் 1.64 கோடி வாக்காளர்களும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 1.67 கோடி வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.
ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் டிசம்பர் 6- ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய டிசம்பர் 13- ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை டிசம்பர் 16- ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல் வேட்பு மனுவை வாபஸ் பெற டிசம்பர் 18- ஆம் தேதி கடைசி நாள். பதிவான வாக்குகள்அனைத்தும் 02.01.2020 அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவோர் ஜனவரி 6 ஆம் தேதி பதவியேற்கின்றனர். மறைமுக தேர்தல் ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறும் என்றும், அதில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்க்கு தேர்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்தன.