தொடர் மழையால் விளைச்சல் குறைந்ததால், சேலத்தில் குண்டு மல்லி விலை கிலோ 1500 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரவலாக குண்டு மல்லி, சன்ன மல்லி, ஜாதி மல்லி, சம்பங்கி, சாமந்தி, அரளி உள்ளிட்ட மலர் விவசாயமும் நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நடக்கும் மலர் சாகுபடியில் 60 சதவீதம் வரை உள்ளூர் தேவைக்கும், மற்றவை பெங்களூர், சென்னை, கோவை ஆகிய நகரங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதமாக பரவலாக, அடிக்கடி பெய்து வந்த மழையால், பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. குறிப்பாக குண்டு மல்லி, சாமந்திப்பூக்களின் விளைச்சல் கடுமையாக சரிந்துள்ளது. இவற்றில், கல்யாண முகூர்த்தம் காரணமாக குண்டு மல்லிக்கான தேவையும் அதிகமாக உள்ளது. என்றாலும் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் குண்டு மல்லியின் விலையும் தாறுமாறாக எகிறியுள்ளது.
சேலம் வ.உ.சி. மலர் சந்தையில், டிச. 5, 2019ம் தேதி நிலவரப்படி, மொத்த விலையில் குண்டு மல்லி ஒரு கிலோ 1500 ரூபாய், சன்னமல்லிப்பூ கிலோ 700 ரூபாய், கனகாம்பரம் கிலோ 500 ரூபாய், அரளிப்பூ 200 ரூபாய், காக்கட்டான் பூ 240 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.
இயல்பாகவே பனிக்காலங்களில் மல்லிப்பூ விளைச்சல் மேலும் குறையும் என்பதால், ஜனவரி மாதத்தில் குண்டு மல்லிப்பூக்களின் விலை கிலோ 4000 ரூபாய்க்கு மேல் வரை உயரும் என்கிறார்கள் மலர் வியாபாரிகள்.