Skip to main content

லேப்டாப் கேட்ட முன்னாள் மாணவரை தாக்கிய ஆசிரியர்!

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

தமிழக அரசு சார்பில் 11, 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் லேப்டாப்களை மாணவர்கள் படிக்கின்ற காலத்திலேயே அரசு பள்ளிகளுக்கு வழங்காததால் படிக்கின்ற மாணவர்களுக்கு உரிய நேரத்தில் லேப்டாப் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

 
கடலூர் மாவட்டத்திலும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிக்கும் வரையிலும் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை. அதனால் பள்ளியை விட்டு சென்ற பிறகும் மாணவர்கள் லேப்டாப் கேட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

TAMILNADU GOVT FREE LAPTOP STUDENT TEACHER INCIDENT POLICE


இந்நிலையில் கடலூர்  மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர் தினேஷ்(19) மற்றும் அவருடன் படித்த நண்பர்களுக்கு 2017- 18 ஆம் ஆண்டுக்கான லேப்டாப் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. அதனால் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் பள்ளிக்கு சென்று அங்கு பள்ளி வளாகத்தில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகனிடம் லேப்டாப் குறித்து கேட்டுள்ளனர். அதில் ஆத்திரமடைந்த ஆசிரியர் சந்திரமோகன் மாணவர் தினேஷை சரமாரியாக தாக்கினார். அதில் மாணவர் தினேஷ் காயமடைந்ததுடன், அவரின் செவித்திறனும், பாதிக்கப்பட்டதாக கூறி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் மாணவரை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பாகியுள்ளது. 

TAMILNADU GOVT FREE LAPTOP STUDENT TEACHER INCIDENT POLICE

மேலும் இது தொடர்பாக  தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் சந்திரமோகனை கைது செய்தனர். அதே சமயம் ஆசிரியர் சந்திரகுமார் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வித்துறையும் விசாரணை மேற்கொண்டுள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்ககோரி மற்ற ஆசிரியர்கள் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 

சார்ந்த செய்திகள்