Skip to main content

ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்கக் கூடாது?- விளக்கமளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு உத்தரவு!

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

tamilnadu government lawyer dmk leader rs bharathi


நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதால், ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்கக் கூடாது என்பது தொடர்பாக விளக்கமளிக்க,  தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்.
 


கடந்த பிப்ரவரி மாதம் அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்தார்.

ஆர்.எஸ்.பாரதியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 23- ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

 


நீதிபதிகள், தங்கள் திறமையால் அல்லாமல், அரசியல் கட்சிகளின் ஆதரவாலேயே அந்தப் பதவிக்கு வருகிறார்கள் என்பதைப் போல் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு இருந்ததாகவும், இது ஒட்டுமொத்த நீதித்துறையின் மாண்பை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாலும், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு வழக்கறிஞர் ஆண்டனி ராஜ் என்பவர் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் நேற்று (29/05/2020) மனு அளித்தார்.

இந்த மனுவை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று (29/05/2020) விசாரித்த அரசு தலைமை வழக்கறிஞர், நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியது தொடர்பாக, ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்கக் கூடாது என்பது குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு உத்தரவிட்டார்.


 

 

சார்ந்த செய்திகள்