யுபிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் முதன்மை தேர்விற்கு பயிற்சி பெற அரசு சார்பில் தங்குமிடத்துடன் கூடிய இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக மீன்வளத்துறை, பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். சென்னையில் பசுமை வழிச்சாலையில் இயங்கி வரும் அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையம், ஒவ்வொரு ஆண்டும் குடிமைப்பணி தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது.
இந்த பயிற்சி மையத்தில் நூலகம், உணவு விடுதி, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளது. இந்த மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அனைத்தும் இலவசம். மேலும் மாணவர்களுக்கு தரமான பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பயின்ற பலரும் தற்போது இந்திய குடிமைப்பணி அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நிலை தேர்வு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அதில் வெற்றி பெற்றவர்கள் முதன்மை தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல்நிலை முடிவுகள் வெளியிடப்பட்ட இரு தினங்களுக்குள் http://www.civilservicecoaching.com/ என்ற இணைய தள முகவரியில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.