ஓய்வூதியதாரர்களுக்குப் பணபலன், 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து ஊழியர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (26.02.2021) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.
இதனால் அரசு தரப்பில், அனைத்து பேருந்து நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்புடன் தற்காலிக ஊழியர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தி.நகர் மற்றும் வடபழனி டிப்போ போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக் தொடர்வதால், தனியார் ஒட்டுநர்களை வைத்து பஸ்களை இயக்குகின்றனர். கோயம்பேடு, ஆவடி, சென்ட்ரல் மற்றும் ப்ராட்வே பஸ் நிலையம் மற்றும் டிப்போக்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன. இதனால் பேருந்துக்கள் அனைத்தும் பணிமனைகளிலே நிறுத்தப்பட்டன.