தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், என்னை தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுனராக தேர்ந்தெடுத்த பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து மக்களுக்காக நான் பணியாற்றுவேன்.

இந்தநேரத்தில் என் பெற்றோர்களுக்கும், தொண்டர்களுக்கும் இந்த வெற்றியை காணிக்கையாக்குகிறேன். கடும் உழைப்பிற்கு பாஜக அங்கீகாரம் தரும் என்று நிரூபித்திருக்கிறார்கள். என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பை தந்த மோடி, அமித்ஷா, ஜேபி.நட்டாவிற்கு எனது நன்றி எனக் கூறியுள்ளார்.
தற்போது வகித்துவரும் பதவியான மாநில தலைவர் பதவி வரும் டிசம்பர் மாதத்தோடு முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ள அவர், இடைக்கால தலைவராக யாரேனும் நியமிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு, பின்னர்தான் பதில் தெரியும் என பதிலளித்தார். 2014 ஆம் ஆண்டு முதல் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.