
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த எல்லைக்குக் கிராமம் முருகன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செந்தாமரைக்கண்ணன். அவரது மகன் அமுதன்(8) வீட்டு அருகே கழிவறை ஓரமாக விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென கழிவறையில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் சிறுவன் அமுதன் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி மூச்சு திணறி மயக்கம் அடைந்துள்ளார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுவனின் உடற்கூறு ஆய்விற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது வீட்டின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.