
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (16/09/2020) பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
கிஷான் திட்ட முறைகேடு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் திமுக. காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக்கொண்டு வந்தனர்.
கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி, கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். கிஷான் திட்ட முறைகேட்டில் மாநில அரசிற்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்க வேண்டும். ரூபாய் 110 கோடி ஊழலுக்கு யார் காரணம்? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, "கிஷான் திட்டத்தில் புதிய பயனாளிகள் பதிவு செய்வது மறுஉத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவகிறது. இதுவரை 30.36 லட்சம் பயனாளிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. கிஷான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்களிடம் இருந்து இதுவரை ரூபாய் 52.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5,37,955 போலி பயனாளர்களின் கணக்குகளில் உள்ள பணத்தை முடக்க, பறிமுதல் செய்ய தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சி.பி.சி.ஐ.டி இதுவரை 41 பேரை கைது செய்துள்ளது. கிஷான் திட்டத்தில் தவறு செய்த ஒருவர் கூட தப்ப முடியாது" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.