Skip to main content

 சகஜானந்தா பிறந்தநாளை அரசு விழாவாக நடத்த மறுப்பு! போராட்டம் நடத்த முடிவு!

Published on 25/01/2019 | Edited on 25/01/2019
sa

 

சிதம்பரத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏழைமக்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்று கல்வி நிறுவனங்களை நிறுவி, சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமேலவை உறுப்பினராகவும் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய சுவாமி சகஜானந்தாவுக்கு அவர் வாழ்ந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய சிதம்பரம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் எம்எல்ஏவாக இருந்த பாலகிருஷ்ணன் சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தார்.

 

அதன் பேரில் அவர் வாழ்ந்த இடத்தில் 1.25 கோடி செலவில் அரசு மணிமண்டபத்தை அமைத்துள்ளது. இந்நிலையில் மணிமண்டபம் அமைத்து முதல் முறையாக வரும் 27-ந்தேதி அவரது பிறந்த நாள் வருகிறது. மணிமண்டபத்தில் சுவாமியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பள்ளியின் பழைய மாணவர்கள். ஆசிரியர்கள், சுவாமியின் மீது பற்றுகொண்டகவர்கள், கல்விக்கழகத்தின் கல்விக்குழு உறுப்பினர்கள், மணிமண்டப ஒருங்கிணைப்பு குழுவினர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அப்போது சம்பந்தபட்ட அதிகாரிகள் இதனை அரசு விழாவாகதான் கொண்டாடபடும் என்று கூறிவந்தனர்.

 

இந்த நிலையில் பிறந்த நாள் விழாவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தற்போது அரசு விழாவாக கொண்டாட முடியாது என்று சம்பந்தபட்டதுறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், பள்ளியின் பழைய மாணவர்கள், சமூக ஆர்வர்கள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சுவாமி பிறந்த நாளை அரசு விழாவாக கொண்ட அறிவிப்பு வெளியிடவில்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தபோவதாக கூறிவருகின்றனர்.

 

இதுகுறித்து சகஜானந்தா மணிமண்டப ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாலையா கூறுகையில், சமூக புரட்சி செய்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் உழைத்த உத்தமர்களுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டினால் அவரது பிறந்தநாள் விழாவை அரசு நடத்தும். தற்போது கூட கடலூரில் ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு அரசு அறிவித்து அரசுவிழாவாக நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் கல்வியில் சமூக புரட்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் 50 ஆண்டுகால மக்கள் பணியில் இருந்தவருக்கு அரசு விழா இல்லை என்பது வேதனையாக உள்ளது. எனவே தமிக முதல்வர் போர்கால அடிப்படையில் சகஜானந்த மணிமண்டபத்தில் அவரது பிறந்த நாள் அன்று அரசு விழாவாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்