Skip to main content

'நிவர்' புயல் மீட்புப் பணி... தயார் நிலையில் தமிழகம்!

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

 Tamil Nadu ready for Nivar storm rescue operation!

 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் உருவான 'நிவர்' புயல், கரையை நோக்கி நகர்ந்து மிரட்டிவரும் வேளையில், தன் இயல்பு வாழ்க்கையை சென்னையும் தொலைத்திருக்கிறது.

 

நங்கநல்லூரில் கனமழை காரணமாக, 500 மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதையை, மழை நீர் முற்றிலுமாகச் சூழ்ந்துள்ளது. அதனால், வேளச்சேரி, பழவந்தாங்கல், கீழ்க்கட்டளை, புழுதிவாக்கம், மடிப்பாக்கம் போன்ற ஏரியாக்களுக்கு வாகனத்தில் செல்பவர்கள், கடும் அவதிக்கு ஆளாகி, மாற்று வழியில் செல்கின்றனர். மேலும், அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 108 ஆம்புலன்ஸ் மாநில கட்டுப்பாட்டு அறையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

 

 Tamil Nadu ready for Nivar storm rescue operation!

 

செய்தியாளர்களிடம் அவர் “நிவர் புயலை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. 108 ஆம்புலன்ஸ் சேவை, தமிழகம் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்டு வந்தாலும், நிவர் புயலால் ஏற்படும் அவசரகாலத் தேவைக்காக, 465 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பிரத்யேகமாக, தயார் நிலையில் உள்ளன. கடற்கரைக்குச் செல்வதற்கு கடலோரப் பகுதிகளில் 30 ஆம்புலன்ஸ்கள் தயாராக இருக்கின்றன. நோயாளிகளைக் காப்பதற்காக மட்டுமல்லாது, செல்லும் வழியில் மரங்கள் விழுந்திருந்தால், அவற்றை அப்புறப்படுத்துவதற்கான உபகரணங்களை, 108 ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 108 மாநில கட்டுப்பாட்டு அறைக்குப் புயல் சார்ந்த அழைப்புகள் குறைவாகவே வந்துள்ளன.

 

எந்த நிலையிலும், புயல் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு, சுகாதாரத்துறை தயாராக உள்ளது. தேவையான மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மழை நேரத்தில் கரோனோ தொற்றினைக் கட்டுப்படுத்துவது சற்று சவாலானதுதான். இருந்தபோதிலும், சமூக இடைவெளியைப் பின்பற்றி, முகக்கவசம் கட்டாயம் அணிந்து, நோய்ப் பரவலைத் தடுக்க வேண்டும். மழைக்கால தொற்று நோய்களைத் தடுப்பதற்கும் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

 

 Tamil Nadu ready for Nivar storm rescue operation!

 

புயல் மீட்புப் பணிக்காக, கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் சுமித்ரா மற்றும் ஐ.என்.எஸ் ஜோதி ஆகிய போர்க் கப்பல்கள், மீட்புப் பணிக்காக தமிழகம் வந்துள்ளன. சென்னை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மண்டபம் ஆகிய இடங்களில், பதினைந்து இந்தியக் கடலோர காவல்படை பேரிடர் நிவாரணக் குழுவினர், மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்