குன்னம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவும் பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவசங்கர் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கரோனா தொற்று காரணமாகத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தவர் தற்போது நோய் பரவவில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு தீவிர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி லப்பைக்குடிகாடு பேரூராட்சி அலுவலகத்திற்குச் சென்ற அமைச்சர் அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசனை செய்தார்.
நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு ஆலோசனைகளைக் கூறிய அவர், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று ஆய்வுப் பணியை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ரத்னா, எம்.எல்.ஏக்கள், அரியலூர் வழக்கறிஞர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் கண்ணன் உட்படப் பலரும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது ரூ. 3.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். அங்கு நடைபெற்ற ஆய்வுக்கூடத்தின் போது, “அதிகாரிகள் அரசு அலுவலர்களிடம் அனைத்து துறை அதிகாரிகளும் அலுவலர்களும் ஒன்றிணைந்து கரோனா குறித்து பொதுமக்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் தைரியத்துடன் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்" எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், "தளபதி அவர்கள் தலைமையிலான தமிழக அரசு மக்களுக்கான திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு தயாராக உள்ளது. இதற்கு பொதுமக்களும், அதிகாரிகளும், அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார். அமைச்சர்களும் அதிகாரிகளும் நேரம் காலம் பார்க்காமல் நோய் பரவல் தடுப்பு பணிகளைச் செய்து வருகிறார்கள் என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள்.