மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (01/04/2022) டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, டெல்லி அரசின் நவீன முறையில் கட்டப்பட்டு, இயங்கி வரும் மாதிரி பள்ளியை அம்மாநில முதலமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாணவ, மாணவியர்கள் ரோஜா பூ வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். பள்ளியில் செய்யப்பட்டுள்ள அதிநவீன வசதிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதலமைச்சர், நீச்சல் குளம், வகுப்பறை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். மேலும், மாணவ, மாணவியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "டெல்லியைப் போன்று விரைவில் தமிழ்நாட்டிலும் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த பணிகள் முடிவுற்று பள்ளிகள் உருவாக்குகிற நேரத்தில் நிச்சயமாக, முதலமைச்சர் கெஜ்ரிவாலை நாங்கள் அழைக்கவிருக்கிறோம். அவர் தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் உங்கள் மூலமாக அவரை நான் அழைக்கிறேன். கல்விக்கும், மருத்துவத்திற்கும் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசுப் பள்ளியைக் காட்சிப்படுத்தியது எங்களுக்கு கிடைத்த பெருமை" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, டெல்லி அரசின் மொகாலா கிளினிக்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, மருத்துவர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வின் போது, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., டெல்லி மாநிலத் துணை முதலமைச்சரும், கல்வித்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா மற்றும் டெல்லி மாநில அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.