மதவாதம், வகுப்புவாதம் இவற்றுடன் இனவாதத்தையும் ஏந்தி ஹிட்லர், ராஜபட்சே வழியில் மோடி! தமிழர்க்கு மருத்துவம் மறுக்க “நீட்”டை நுழைத்து, அதனையும் தமிழ்நாட்டிற்குள் எழுதவிடாமல் சதி! நீதிமன்றம் சொல்லியும் கேட்காமல் மேல்முறையீடு செய்கிறார் மோடி என்றால், அதனைத் தட்டிக்கேட்காமல் என்ன செய்கிறது இபிஎஸ்-ஓபிஎஸ் அரசு? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:-
அரசமைப்புச் சட்டத்துக்கும் தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுக்கும் எதிராக நீட் நுழைவுத் தேர்வைத் திணித்தார் மோடி.
இதன்மூலம் தமிழர்க்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியையே மறுப்பதுதான் அவரது நோக்கம்.
இந்த நோக்கம் தமிழினத்தையும் தமிழ்மண்ணையும் சிதைத்துவிடும் அவரது சதித்திட்டத்தின்படியானதாகும்.
அந்த சதித்திட்டத்தை நிறைவேற்ற, ஏற்கனவே அவர் கொண்டுள்ள மதவாதம், வகுப்புவாதத்துடன் இனவாதத்தையும் இப்போது ஏந்தியுள்ளார்.
அதன்படி ஹிட்லர், ராஜபட்சே வழியிலும் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்; வரலாற்றில் இன அழிப்பின் முன்னோடிகளாய் இடம்பெற்றவர்களாயிற்றே ஹிட்லரும் ராஜபட்சேவும்!
இந்த நீட்டை நுழைத்ததன் நோக்கமே அதை வைத்து தில்லுமுல்லுப் பித்தலாட்டங்கள் செய்து தமிழக மாணவர்களை மருத்துவக் கல்லூரிப் பக்கமே வரவிடாமல் தடுப்பதுதான்.
ஏற்கனவே கடந்த ஆண்டு நீட் தேர்வின்போது ஏகப்பட்ட கெடுபிடிகள்; மாணவிகளின் உள்ளாடையைக்கூட களையச் செய்த அக்கிரமங்கள்!
இந்த ஆண்டு அதைவிட மோசம்; நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நீட் தேர்வு மையம் கேரளாவில் அமைக்கப்பட்டது.
இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உள்ளூரிலேயே கொஞ்சம் தொலைவான இடம் என்றால் வழிச்செலவுக்கே திண்டாடும் நிலையில், வெளி மாநிலங்களுக்குச் செல்வது எப்படி?
எனவே தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மையங்களை தமிழகத்திலேயே அமைக்க உத்தரவிடக் கோரி, காளிமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தன் மனுவில் அவர், 17 வயதே நிரம்பிய மாணவர்களை அண்டை மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதச் சொல்வதால், அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை எடுத்துச் சொல்லியிருந்தார்.
இதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்களை அமைக்க உத்தரவிட்டது.
ஆனால் மோடி, இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறார்.
இப்படிப்பட்ட ஒருவர் எந்த நாட்டிலாவது பிரதமராக வந்ததுண்டா?
இப்படிப்பட்ட ஒருவரை தட்டிக்கேட்காமல் இதுவரை தமிழகமும்தான் இருந்ததுண்டா?
ஆனால் இதைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் இருக்கிறது இபிஎஸ்-ஓபிஎஸ் அரசு!
இதைத் தட்டிக்கேட்டுத் தடுப்பதைவிட்டு வேறு என்னதான் வேலை தமிழக அரசுக்கு?
தமிழக அரசைப் பார்த்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்கும் கேள்வி இதுதான்.
பதில் என்ன?