
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் எம்எல்ஏவுமான டி.டி.வி. தினகரன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் மாநில உளவுத்துறையின் நடவடிக்கை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக முதல்வரே துப்பாக்கிச் சூடு நடந்தது டிவியை பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று கூறும் அளவிற்கு உளவுத்துறை உள்ளது.
தமிழக அமைச்சர் ஒருவர் துக்க வீட்டிற்கு சென்றுவிட்டு முதலமைச்சரின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்ததவர்கள்தான் இந்த ஆட்சியில் உள்ளார்கள். பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள். அற்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்கள் இதுதான் இன்றை ஆட்சியின் நிலைமை.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் நடைபெறும். வரும் பாராளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். அதேபோல் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும் பிரதமரை முடிவு செய்வது அமமுகதான்.
தமிழக அரசு சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் வெறும் வெற்று அறிவிப்புகள்தான். முட்டை ஊழல் தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நான் முன்பே கூறியதைப்போல இது இன்னும் அணுகுண்டாக வெளிவரும்.
இதில் பெருமளவு தவறு நடந்திருப்பதற்கு காரணம், ஒரே நிறுவனத்திற்கு தொடர்ந்து முட்டை சப்ளை செய்யும் ஆர்டர் கொடுத்ததால்தான். அதற்கு காரணம் யார். அந்த நிறுவனத்திற்கு தொடர்ந்து சப்ளை செய்ய உதவியது யார். தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதாக கூறும் மத்திய பாஜக அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.