Skip to main content

மலைப்பகுதிகளில் தொடர் ரெய்டு; 5200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
A series of raids on the hills; Destruction of 5200 liters of adulterated liquor

                                                               கோப்புப்படம் 

திருப்பத்தூர் மாவட்டம், வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அதிகரித்துவிட்டது. ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், கள்ளச்சாராய வியாபாரிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு பெயருக்கு வழக்கு போடுகிறார்கள், எப்போதாவது ரெய்டு என்கிற பெயரில் சென்று கள்ளச்சாராய ஊறலை அழிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மாதகடப்பா, தேவராஜபுரம், கோரிபள்ளம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் நந்தினி தலைமையில் போலீசார் இரண்டு நாட்களாக கள்ளச் சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது  தேவராஜபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்ச தயாராக வைத்திருந்த சுமார் 1800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களையும், கோரிபள்ளம் பகுதியில் 1300 கள்ளச் சாராய ஊறல்கள், 65 லிட்டர் கள்ளச்சாராயம் மேலும் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் அடுப்புகள் மற்றும்  மூலப்பொருட்களையும் கண்டறிந்து அழித்தனர். மேலும் தப்பி ஓடிய கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலைச் சேர்ந்த எழுமலை தங்கம், ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அதேபோல் பேர்ணாம்பட்டு வட்ட காவல் ஆய்வாளர் ருக்மான்கதன் தலைமையிலான போலீசார் லட்சுமி வெடி மலைப்பகுதியில் நடத்திய சோதனையில் சுமார் 1,100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு கொட்டி அழிக்கப்பட்டது. குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் சின்னதுரை தலைமையிலான போலீசார் சாத்கர் மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்டு சுமார் 1,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் மற்றும் 60 லிட்டர் கள்ளச்சாராயம் கொட்டி அழிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்கள் மீண்டும் இந்தத் தொழில் செய்யாத வகையில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள், வங்கி கடன்கள் ஏற்பாடு செய்து தந்து வேறு தொழிலுக்கு மாற்ற வேண்டும். லஞ்சம் வாங்கி பழக்கப்பட்ட சில போலீசார் இவர்கள் அந்தத் தொழிலை விட்டு வெளியே போகாமல் மிரட்டி அந்தத் தொழிலை செய்ய வைக்கும் போலீசார்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் வைக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா அமலுக்கு வந்தது” - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Liquor Prohibition Amendment Bill came into force CM MK Stalin announcement

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால்  உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இனி கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் முதலிய குற்றச் செயல்களை முற்றிலும் ஒழிப்பதற்காகப் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில், ஏற்கெனவே நடைமுறையிலுள்ள 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் புதிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்படுமென முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 29-06-2024 அன்று, தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு ஆளுநர்  ஆர். என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அச்சட்ட மசோதாவிற்கு ஆளுநரால்  11-7-2024 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து இச்சட்டத்தின் கீழ் மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டு, ஏற்கெனவே தண்டிக்கப்பட்ட ஒரு நபர் மீண்டும் தண்டிக்கப்படும் போது, அந்த நபரின் சிறைவாசம் முடிந்த பின்பு அவரது தற்போதைய வசிப்பிடப் பகுதியிலிருந்து அவர் வெளியேறி வேறொரு மாவட்டத்திற்கு அல்லது வேறொரு பகுதிக்குச் சென்று வசித்திட உத்தரவு பிறப்பிக்குமாறு மதுவிலக்கு அலுவலர்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க இத்திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

மேலும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள் பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சட்டத் திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞரின் சம்மதமின்றி பிணை வழங்க இயலாத வகையில் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயம் தயாரிப்போர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 அமலுக்கு வந்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Next Story

விஷ சாராய மரண வழக்கு; தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Kallakurichi Dt Karunapuram incident The court ordered TN govt

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சிலர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதே சமயம் இது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக சார்பில் இன்பதுரை, பாமக சார்பில் கே.பாலு, பாஜக சார்பில் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் ஆகியோர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் இது தொடர்பாக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த மனுக்கள் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சித்திக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (11.07.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு சார்பில், “புதிதாக மேலும் 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் இது தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைப்பதிவு பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “கால தாமதம் செய்யாமல் விஷ சாராய மரண சம்பவம் தொடர்பாக மனுதாரர்களுக்கு அறிக்கை மற்றும் பதில் மனுக்களை தமிழக அரசு அளிக்க  வேண்டும்” என உத்தரவிட்டனர். இதனையடுத்து கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய அனைத்து வழக்குகளும் அடுத்த வியாழன் (ஜுலை 18) அன்று விசாரிக்கப்படும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.