Skip to main content

மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு: தந்தைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் 

Published on 14/02/2022 | Edited on 14/02/2022

 

Supreme Court sent notice to ariyalur girl father

 

அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா, தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியின் அருகேயுள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், கடந்த ஜனவரி 9ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், ஜனவரி 19ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

மதமாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் எனக் கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டார்.

 

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை முருகானந்தம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த நிலையில், தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தடை இல்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சி.பி.ஐ விசாரணைக்கு எதிரான தமிழக அரசின் இந்த வழக்கில் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மாணவின் தந்தை முருகானந்தத்திற்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்