
பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைக்க கூடாது என்ற சூயஸ் நிறுவனத்தின் நிபந்தனையை தமிழக அரசு செயல்படுத்த முயல்கிறது என ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காததும், தனியாருக்கு ராணுவ விமானத்தை பயன்படுத்த அனுமதித்ததும் தவறு எனவும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மின்சாரம், பெட்ரோல் போல கோவை மாநகராட்சியில் குடிநீரை காசு கொடுத்து வாங்க வேண்டுமென்பது ஏற்புடையது அல்ல. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. சூயஸ் நிறுவனம் கோவையை தேர்ந்தெடுக்க கோவை சுற்றுவட்டாரத்தில் 11 அணைகள் இருப்பதே காரணம். 24*7 குடிநீர் என்பது மக்களை ஏமாற்றும் செயல். சூயஸ் நிறுவனமே குடிநீர் கட்டணத்தை தீர்மானிக்கும் என்பதை மாநகராட்சி மறைக்கிறது.
வீட்டின் பரப்பளவிற்கு ஏற்ப குடிநீர் கட்டணம், பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைக்க கூடாது என்ற சூயஸ் நிறுவனத்தின் நிபந்தனையை செயல்படுத்த முயல்கிறது. குடிநீரை வணிகமாக்குவதை ஏற்க முடியாது. சூயஸ் குடிநீர் திட்டத்தை எவ்வளவு அடக்குமுறை இருந்தாலும் எதிர்த்து முறியடிப்போம்.
சொத்து வரி உயர்வை இரத்து செய்ய வேண்டுமெனவும், தமிழக அரசின் கொள்கை, திட்டங்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை கைது செய்வது ஜனநாயக விரோதமானது. துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காதது தவறு.
தனியாருக்கு ராணுவ விமானத்தை பயன்படுத்த அனுமதித்ததும் தவறு. அரசியல் நோக்கத்திற்காக மத்திய அரசு வருமான வரித்துறை சோதனைகளை நடத்துகிறது. சத்துணவு பணியாளர்கள் முதல் துணை வேந்தர் நியமனம் வரை ஊழல் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.