திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளியில் ஒரு வகுப்பறையில் திடீரென 10 அடி ஆழத்திற்குப் பள்ளம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களாகத் தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில், திருவள்ளூரில் பல இடங்களில் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. கொற்றலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சொரக்காய்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் சூழ்ந்தது. இந்நிலையில் அதிக வெள்ளத்தால் மண்ணரிப்பு ஏற்பட்டதில் ஒரு வகுப்பறையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. சுமார் 10 அடி ஆழத்திற்கு ஏற்பட்டிருந்த பள்ளத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனடியாக வகுப்பறையிலிருந்து வெளியேறினர். இந்த தகவல் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குச் சென்ற நிலையில் பொதுப்பணித் துறையினர் திடீர் பள்ளம் ஏற்பட்ட பள்ளியை நேரில் ஆய்வு செய்தனர். முதற்கட்டமாக மணல் மூட்டைகள் வைக்கப்பட்ட நிலையில் 15 நாட்களில் பள்ளம் சீர் செய்து தரப்படும் என பொதுப்பணித்துறை உறுதியளித்தது.